Published : 07 Jun 2020 03:31 PM
Last Updated : 07 Jun 2020 03:31 PM

முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது: அறிவுறுத்தல்களை வெளியிட்டது அரசு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க கடைகள், வணிக நிறுவங்களுக்கான, வாடிக்கையாளருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. முகக்கவசம், கைகழுவுதல், சமூக விலகல் குறித்து அதில் சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5-ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடைகள் வியாபார நிறுவனங்கள் திறக்கும் நேரம் உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொது வெளியில் வரும் பொதுமக்கள் அரசு சொல்லும் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதில்லை. இதையடுத்து வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு அரசு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

1 - கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வழிகாட்டல்:

* கைகழுவுவதற்காக சோப்பு, தண்ணீர் அல்லது சானிடைசரை கடைகளின் நுழைவுவாயிலில் கட்டாயம் வைக்க வேண்டும்.

* கடைக்கு முன்பு இரண்டு மீட்டர் இடைவெளியில் வாடிக்கையாளர்கள் நிற்கும் வகையில் அடையாளம் இட்டு அதை கடைபிடிக்க வேண்டும்.

* கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் கையுறைகள் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி மூக்கு, வாய், கண்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

* ஒரு சமயத்தில் ஒரேவொரு வாடிக்கையாளர் மட்டும் பொருள் வாங்க அனுமதிக்கப்படவேண்டும். மேலும் குறியிடப்பட்ட பகுதிகளில் 4 முதல் 5 பேர் வரை மட்டுமே காத்திருக்க வேண்டும்.

* கடைகள் காற்றோட்டமாக இருக்கும் வகையில் அனைத்து ஜன்னல்கள் மற்றும் கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும்.

2 - விழிப்புணர்வு பலகை

* கடைகளின் நுழைவுவாயிலில் 3 அடிக்கு 3 அடியில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசரில் கை சுத்தம் செய்வது, சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு வாசகம் எழுதி வைத்திருக்க வேண்டும்.

3 - கிருமி நீக்க நடவடிக்கை:

* கடைகளின் தரை தளம், அடிக்கடி தொடக்கூடிய மேஜைகள், கதவுகள் ஆகியவை 1 சதவீத ஹைபோகுளோரைட் கரைசல் (1 கிலோ பிளீச்சிங் பவுடர் 30 லிட்டர் தண்ணீர் கலந்த கரைசல்) அல்லது 2.5 சதவீத லைசால் (1 லிட்டர் லைசாலை 19 லிட்டர் தண்ணீரில் கலந்து தயாரிப்பது) கொண்டு தினசரி 10 முறை சுத்தம் செய்ய வேண்டும்.


4 - ஊழியர்களுக்கான விழிப்புணர்வு:

* கைக் கழுவுதல், சமூக விலகல், போதிய சுத்தமான காற்றோட்ட வசதி, தளங்களை சுத்தப்படுத்தும் பயிற்சி, நோயுற்ற நிலையில் கைகொள்ளவேண்டிய பயிற்சி, ஆரம்பகால முன் தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

5 - ஊழியர்களின் ஆரோக்கியம்

* கடையில் வேலை செய்யும் ஊழியர் எவருக்கேனும் சளி, காய்ச்சல் இருந்தால் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த வேண்டும். மருத்துவரிடம் பரிசோதனை செய்துவிட்டு வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகே வேலைக்கு திரும்ப வேண்டும்.

இரண்டாவது வழிகாட்டுதல்:

6 - வாடிக்கையாளர்களுக்கான எச்சரிக்கை:

* சளி, இருமல், காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.

* கடைக்கு உள்ளே செல்லும் போதும், வெளியே வரும் போதும் சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது சானிடைசர் கொண்டு கைகளை கழுவ வேண்டும்.

* அனைத்து வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். முகக் கவசங்கள் இல்லையெனில் வாடிக்கையாளர்களை பொருட்கள் வாங்க அனுமதிக்கக் கூடாது.

* அனைத்து வாடிக்கையாளர்களும் சமூக விலகலை கடைபிடிக்கும் வண்ணம் கடைக்கு முன்பாக குறியிடப்பட்ட இடங்களில் நின்று பொறுமையாக பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும்.

* தேவையின்றி கடைகளில் இருக்கும் எந்த பொருளையும் தொடக் கூடாது.

* வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு திரும்பியவுடன் கை, கால்களை நன்கு கழுவ வேண்டும்.

இவ்வாறு தலைமைச் செயலர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x