Last Updated : 07 Jun, 2020 01:45 PM

 

Published : 07 Jun 2020 01:45 PM
Last Updated : 07 Jun 2020 01:45 PM

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் கொள்கை: கைவிடக்கோரி மத்திய நிதிஅமைச்சருக்கு புதுச்சேரி எம்பிக்கள் கடிதம்

புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்கும் கொள்கையை கைவிடக்கோரி மத்திய நிதி அமைச்சருக்கு புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணனும், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கமும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசு யூனியன் பிரதேசங்களில் இயங்கும் மின்சார விநியோகம் தனியார்மயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதுச்சேரியிலும் மின்சார துறையை தனியாருக்கு விடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து பலவித போராட்டங்கள் தொடர்ந்து நடக்கிறது

இம்முடிவை கைவிடக்கோரி புதுச்சேரி எம்பிக்கள் மத்திய நிதி அமைச்சருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன்:

புதுச்சேரி மின்துறையில் 2200 பொறியாளர்களும், தொழில் நுட்பப் பணியாளர்களும் அரசு ஊழியர்களாகப் பணிபுரிகின்றனர். தற்போது அவர்களுடைய பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே புதுச்சேரியில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவதால், இது மேலும் இந்த பிரச்னையை தீவிரமாக்கும்.

தற்போது ஒரு யூனிட் மின்சாரம் ரூ.5.20 க்கு உற்பத்தியாகிறது. தனியார்மயமாகப்படும்போது இது ரூ.7 வரையில் உயரும் வாய்ப்புள்ளது. அதனால், வீட்டு பயனாளிகளுக்கு அரசாங்கம் ஒரு யூனிட் ரூ.1.50 வீதம் வழங்குகிறது. இது தனியாரிடம் போகும்போது அவர்கள் வைத்ததே கட்டணம் என்றாகும்; பயனாளிகளின் நிலைமை திண்டாட்டமாகும்.
ஒடிசாவில் மின் விநியோகம் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அங்கு பாப் சூறாவளியின்போது மின்விநியோகம் சீரமைக்க 3 மாதங்களானது.

புதுச்சேரியில் பலமுறை புயல் வீசியபோதெல்லாம் மின்துறை சிறப்பாக பணிபுரிந்து விரைந்து மின்நிலையை சீராக்கியுள்ளனர். தனியார்மயம் என்பது சிறப்பான சேவைக்கு உத்திரவாதம் ஆகாது. . விவசாயிகள், குடிசைவாசிகள், மின் துறைப் பணியாளர்கள் ஆகியோரின் நலனைக் கருதி, தனியார்மயமாக்கும் முடிவைக் கைவிடவேண்டும்.

புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்:

வீட்டு உபயோகத்திற்காக வீடுகளுக்கு 100 யூனிட்கள் வரை குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்கி வருகிறோம். தொழிற்சாலைகள் புதுச்சேரி மின் துறை மற்றும் இணைமின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுகிறது. சலுகை கட்டணத்தால் ஏற்படும் வருவாய் இழப்பை புதுச்சேரி அரசு ஈடுசெய்கிறது. மின் உற்பத்தி நிலையங்களில் பெரிய அளவில் நிலுவை எதுவும் இல்லை, தற்போதைய நிலுவைத் தொகை மட்டுமே கடந்த சில மாதங்களாக செலுத்த வேண்டி உள்ளது.அனைத்து பராமரிப்பு பணிகளும் துறை ஊழியர்களால் செயல்படுத்தப்படுவதால், பராமரிப்பு கட்டணங்கள் சதவீதத்தின் அடிப்படையில் குறைவாகின்றன.

புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகள் 15% ஆகும், இது மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவு.இந்தநிலையில் மின் துறை தனியார்மயமாக்கப்பட்டால், மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது, மேலும் தனியார் துறை லாபம் ஈட்டும் அணுகுமுறையில் செயல்படும். தேய்மானத்தின் மதிப்பை மேற்கோள் காட்டி பொதுமக்களுக்கு மின்கட்ட உயர்வை திணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கூட உள்ளன. மின் துறையை தனியார்மயமாக்குவதால் மக்களுக்கு சேவை மிகவும் பாதிக்கப்படும்.

மேலே விளக்கப்பட்டுள்ள காரணங்களைக் கருத்தில் கொண்டு, மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்குவதற்கான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அரசு கீழ் உள்ள துறையாக தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x