Published : 07 Jun 2020 07:16 AM
Last Updated : 07 Jun 2020 07:16 AM

காய்ச்சல் அதிகம் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மற்றும் கோபி காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதை சோதனை செய்யத் தேவையான தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மாணவ, மாணவியருக்கு இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்படுவதோடு, தேர்வு அறைப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு தேர்வறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கும். மாணவர்கள் காலை 9.45 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும். தேர்வு எழுதவுள்ள மாணவர்களில், யார், யாருக்கு கரோனா பாதிப்பு உள்ளது என கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்.

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி, ஆன்லைன் மூலம் கல்விக் கட்டணம் செலுத்திட வேண்டுமென பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்துவது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தற்போது, ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது மட்டுமே சாத்தியமாக உள்ளது. கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் கூறி, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளிலிருந்து மாணவ, மாணவியர்களை நீக்கினால் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோபி அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வினோபா நகர் பகுதியில் பூமிதான இயக்கத்தின் கீழ் நிலம் பெற்று குடியிருந்து வரும் 91 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை அமைச்சர் வழங்கினார். விளாங்கோம்பை மலைக்கிராமத்துக்கு தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x