Published : 07 Jun 2020 07:00 AM
Last Updated : 07 Jun 2020 07:00 AM

சென்னையில் 16 சதவீத தெருக்களில் மட்டுமே கரோனா; தொற்றை குறைக்கும் பணி மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படுகிறது: சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் உள்ள மொத்த தெருக்களில் 16 சதவீத தெருக்களில் மட்டுமே கரோனா தொற்று உள்ளது. அப்பகுதிகளில் தொற்றை குறைக்கும் பணியைமக்கள் இயக்கமாக கொண்டு செல்வதாக சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பழையவண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெரு, தண்டையார்பேட்டை நேதாஜி நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகளை வருவாய் நிர்வாக ஆணையரும், சென்னை மாநகராட்சிக்கான கரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது நேரு நகர் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்துகேட்டறிந்தார். பின்னர் அங்குஇருந்த நடமாடும் கரோனா பரிசோதனை மையம் சார்பில், தொற்று அறிகுறி உள்ளோரிடம் திரவ மாதிரிகள் சேகரிக்கப்படுவதைப் பார்வையிட்டார்.

மக்கள் ஒத்துழைப்புடன்..

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் மொத்தம் 39,537 தெருக்கள் உள்ளன. அவற்றில் 6,537 தெருக்களில் மட்டுமே, அதாவது 16 சதவீத தெருக்களில் மட்டுமே கரோனா தொற்று உள்ளது. இதிலும் 4,404 தெருக்களில்தான் தொற்று அதிகமாக உள்ளது. தொற்றைக் குறைக்கும் பணி மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இத்தெருக்களில் தொற்றை குறைக்க தெருவாரியாக, மக்கள் ஒத்துழைப்புடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்பட்டதன் விளைவாக ராயபுரம் மண்டலம் வி.ஆர்.பிள்ளை தெருவில் தற்போது புதிய தொற்று இல்லை. 16 சதவீத தெருக்களில் மாநகராட்சிபகுதியில் தினமும் சுமார் 140 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு, நோய் அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x