மனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி

மனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்கள்: அமமுக உதவி
Updated on
1 min read

மனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டி குறித்த செய்தி இன்றைய 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியானது. இதனை அறிந்த அமமுக நிர்வாகிகள் மூதாட்டிக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவினர்.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள்(62). இவருக்கு முனுசாமி (25) என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார். பச்சையம்மாளின் தம்பி பிச்சாண்டியும் (40) மனவளர்ச்சி குன்றியவர்.

தம்பியைக் கவனித்துக் கொண்டிருந்த தாய், தந்தையர் இறந்ததால் பச்சையம்மாள் தனது தம்பியைப் பார்த்துக்கொள்ள மோச்சூரில் இருந்து கோவிந்தவாடி அகரம் பகுதிக்கு வந்துவிட்டார். மகன் முனுசாமியையும் உடன் அழைத்து வந்துவிட்டார். இவர்கள் இருவரும் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் ரேஷன் அட்டை கூட இன்னும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இது தொடர்பான செய்தி இன்றைய 'இந்து தமிழ் திசை' நாளிதழில் வெளியானது. இச்செய்தியை அறிந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மூதாட்டிக்கு உதவும்படி காஞ்சிபுரம் மாவட்ட அமமுக செயலாளருக்கு அறிவுறுத்தினார். அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட அமமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மொளச்சூர் இரா.பெருமாள், வாலாஜாபாத் ஒன்றிய அமமுக செயலாளர் வேளியூர் எம்.தனசேகர் ஆகியோர் மூதாட்டி பச்சையம்மாள் குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

மேலும் உதவிகள் தேவைப்படின் தயங்காமல் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தினர். அப்போது அமமுக ஒன்றிய இணைச் செயலாளர் கோவிந்தவாடி பாலகிருஷ்ணன், நகர அம்மா பேரவை சதீஷ், தோழர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in