Published : 06 Jun 2020 09:06 PM
Last Updated : 06 Jun 2020 09:06 PM

கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி

உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்று காட்டுவதற்காக கரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்ததாகச் சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள்படும் என திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும் அதைக் குறைத்துக் காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கரோனா பேரிடர் முழு அடைப்புக் காலத்தை மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதனால் உலக அளவில் இந்தியா 6- இடத்துக்கு வந்துவிட்டது. இந்தியாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது.

இந்நிலையில் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து தமிழக அரசு தளர்த்தி வருகிறது. இதனால் நோய்ப் பரவல் வெகுவேகமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. சென்னையில் ஒவ்வொரு நாளும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கண்டறியப்பட்டு வருவது கவலை அளிக்கிறது.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் எந்த எச்சரிக்கையையும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் இன்னும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்களென்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் சென்னையில் அரசு மருத்துவமனைகளிலேயே அனுமதிக்கப்படவில்லை என்ற புகார்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகள் கரோனா சோதனை செய்துவிட்டு வந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று நோயாளிகளைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றன.

மக்களுடைய அழுத்தத்தினாலும், எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களின் காரணமாகவும் தனியார் மருத்துவமனைகளின் கட்டணம் இப்பொழுது தமிழக அரசால் வரன்முறைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவற்றின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. இதனால் தனியார் மருத்துவமனைகள் யார் அதிகம் பணம் கொடுப்பார்களோ அவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளுகின்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகின்றன என்று கூறப்படுகிறது.

கரோனா பாதிப்பு அதிகம் இருந்தாலும் அதனால் உயிரிழப்பு என்பது மிக மிகக் குறைவாக இருக்கிறது என்பதே அரசு சார்பில் சொல்லப்படும் சமாதானமாக இருக்கிறது. இதனால் மக்களும் பயத்தில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டனர். மேற்கொள்ள வேண்டிய எந்த முன்னெச்சரிக்கையையும், கட்டுப்பாடுகளையும் மக்கள் மேற்கொள்ளாமல் போவதற்கு அரசே பொறுப்பாகும்.

உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்ற வாதத்தை மெய்ப்பிப்பதற்காக மாவட்ட மருத்துவமனைகளில் கரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்தார்கள் என்று சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன. அது உண்மையாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள்படும்.

எனவே, இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பொதுமக்கள் விழிப்போடு இருந்து மருத்துவமனைகளில் அவ்வாறு இறப்புகளை மறைக்கிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x