

மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸார் 2 பேருக்கு ‘கரோனா’ இருப்பது கண்டறியப்பட்டது.
மதுரை விமானநிலையத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியதால் பயணிகளைக் கையாளும் விமானநிலையப் பணியாளர்கள், தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவ்வப்போது சுகாதாரத்துறையினர் ‘கரோனா’ பரிசோதனை செய்து வருகின்றனர்.
இதில், கடந்த 2 நாளாக நடந்த பரிசோதனையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேருக்கு ‘கரோனா’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தில் 250-க்கும் மேற்பட்ட தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர்.
நேற்று நடந்த பரிசோதனையில் முதலில் ஒரு தொழில் பாதுகாப்பு படை வீரருக்கு ‘கரோனா’ பரிசோதனை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவருடன் பணிபுரிந்த மற்ற வீரரையும் சோதனைக்கு உட்படுத்தினர்.
இதில், இன்று ஒரு வீரருக்கு ‘கரோனா’ இருப்பது கண்டறியப்பட்டது. 2 வீரர்களுக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டதால் ஒட்டுமொத்த தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயணிகளை கையாளும் மற்ற விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் ‘கரோனா’ இருக்கிறதா? என சுகாதாரத் துறையினர் ‘கரோனா’ பரிசோதனை செய்து வருகின்றனர்.