

திருநெல்வேலியில் மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் டி.ஏ.கே.இலக்குமணன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 81.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே சங்கனாங்குளம் கிராமத்தில் பிறந்த இலக்குமணன், ஆலை தொழிலாளியாக இருந்து, திமுகவில் நாங்குநேரி தாலுகா செயலாளர், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட பொருளாளர், மாவட்ட செயலாளராகவும், பின்னர் மதிமுகவில் இணைந்து மாவட்ட செயலாளராகவும் பொறுப்புகளை வகித்திருந்தார்.
மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராக இருந்த அவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் காலமானார். அவரது உடல் திருநெல்வேலி மீனாட்சிபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் டி.ஏ.கே.இலக்குமணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட செய்தியில்,"திருநெல்வேலி மாவட்டத்தில் திமுகவை பாடுபட்டு வளர்த்த முன்னோடி செயல் வீரர்களுள் ஒருவர் டி.ஏ.கே.இலக்குமணன். எழுபதுகளில் நாங்குநேரியில் திமுக வட்ட செயலாளராகப் பணியாற்றிய நாள்முதல், 45 ஆண்டுகள் என்னோடு உயிராகப் பழகியவர்.
மாவட்டச் செயலாளராக பொதுப் பிரச்சினைகளில், மக்கள் பிரச்சினைகளில் தொண்டர்களைத் திரட்டி, இடைவிடாத போராட்டங்களை நடத்தினார்.
திட்டமிட்டு பணியாற்றக்கூடிய செயல் ஆற்றல் மிக்கவர். அவரது மறைவு செய்தி என்னை அதிர்ச்சி அடைய செய்தது. அவருக்கு மதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.