Published : 06 Jun 2020 06:30 PM
Last Updated : 06 Jun 2020 06:30 PM

அத்தியாவசியப் பொருட்களிலிருந்து தானியங்கள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு நீக்கம்: விவசாயிகள் சங்கம் போராட்ட அறிவிப்பு

அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ல் மத்திய அரசு பல திருத்தங்களைச் செய்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்திய விவசாயத்தை திறந்துவிடும் ஆபத்து உள்ளதால், இச்சட்டத்திற்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக “ஜூன் 10-ம் தேதி சட்ட நகல் எரிப்பு போராட்டம்” மாநிலம் முழுவதும் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவரச சட்டம் 2020” மற்றும் “விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020” ஆகிய இரண்டு அவசர சட்டங்களின் மூலம் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான பொருப்பிலிருந்து அரசு தன்னை முழுவதும் விடுவித்துக் கொண்டுள்ளது. வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்ய வேளாண் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருணையை எதிர்பார்த்து இருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகளை இச்சட்டம் தள்ளியுள்ளது.

ஒப்பந்த சாகுபடி என்ற பெயரில் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் எதைப் பயிரிட வேண்டுமென்பதையும், என்ன விலைக்கு விற்க வேண்டுமென்பதையும் கார்ப்பரேட் கம்பெனிகள் தீர்மானிப்பதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு விவசாயத்தின் மீதிருந்த அதிகாரத்தை இழப்பதுடன், இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகள் எடுத்துக்கொள்ள இந்த அவசர சட்டம் வழிவகுத்துள்ளது.

தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியிருப்பதன் மூலம் விவசாயிகளிடமிருந்து மலிவான விலைக்கு பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்ளை லாபத்திற்கு விற்கும் வர்த்தகர்களுக்கே இந்த திருத்தச் சட்டம் உதவும். இதனால் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மிகப்பெரும் இன்னல்களுக்கு உள்ளாவதுடன், கூடுதல் விலையும் கொடுக்க வேண்டி வரும்.

சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் விலையை அரசு தீர்மானிப்பது, அரசு கொள்முதல் உத்தரவாதம், இடுபொருட்களைக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்குவது போன்ற நடவடிக்கைகள்தான் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க உதவுமே தவிர, மத்திய பாஜக அரசு இப்போது கொண்டு வந்துள்ள அவசர சட்டம் விவசாயிகளுக்கு விரோதமானது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்திய விவசாயத்தை திறந்துவிடும் ஆபத்து உள்ளது.

எனவே, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்த அவசர சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மத்திய அரசை வலியுறுத்துகிறது. விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் இச்சட்டத்திற்கு விவசாயிகள் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக “ஜூன் 10-ம் தேதி சட்ட நகல் எரிப்பு போராட்டம்” மாநிலம் முழுவதும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

விவசாயிகளைக் கைகழுவி விடும் மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் இச்சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் அனைத்துப் பகுதி விவசாயிகளும் பங்கேற்று வெற்றியடையச் செய்யுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x