

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் 3 உதவி ஆய்வாளர்கள், 10 காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 312-ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 326 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 10 பேர் சென்னையில் இருந்து வந்தவர்களுடன் தொடர்புடையவர்கள். மேலும் ஒருவர் அபுதாபியில் இருந்து வந்தவர். மேலும், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் பட்டாணி என்பவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்திருப்பேரையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நபர் காவல் ஆய்வாளருக்கு நண்பராம். அவர் மூலம் ஆய்வாளருக்கு கரோனா தொற்று பரவியுள்ளது.
காவல் ஆய்வாவளர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆய்வாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்த ஏரல் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசனி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
மேலும், அங்கு பணியாற்றும் 3 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 10 காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காவல் ஆய்வாளரின் வீடு திருநெல்வேலி வி.எம்.சத்திரம் பகுதியில் இருப்பதால், அங்குள்ள சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அந்த பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த மேலும் 15 பேர் குணமடைந்ததை தொடர்ந்து இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்று அவர்களுக்கு பழக்கூடைகளை கொடுத்து வாழ்த்தி அனுப்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.