Published : 06 Jun 2020 05:54 PM
Last Updated : 06 Jun 2020 05:54 PM

ஜெ.அன்பழகன் திராவிடச் சொத்து; அவர் நலமடைய வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு 

ஜெ.அன்பழகன், அமைச்சர் செல்லூர் ராஜூ | கோப்புப் படம்.

மதுரை

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ''ஜெ.அன்பழகன் திமுகவில் இருந்தாலும் அனைவரும் திராவிட இயக்கத்தில் இருக்கிறோம். அவர் திராவிடச் சொத்து. அவர் நலமடைய வேண்டும்'' என அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்திருப்பது அவரின் அரசியல் பண்பை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழக அமைச்சர்களில் வெள்ளந்தியான மனிதராக அறியப்படுபவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. தெர்மோகோலை வைத்து அவரைக் கிண்டலடித்ததைக்கூட எளிதாகக் கடந்து சென்றவர். ஆனால் அவர் சொந்தமாக மெடிக்கல் ஷாப் வைத்திருந்ததும், அவருக்குத் தெரியாத ஆங்கில மருந்துகளே இல்லை என்பதும் பலரும் அறியாத ஒன்று.

கட்சி வித்தியாசம், விஐபி பந்தா இன்றி வெளிப்படையாகப் பழகும் அமைச்சரான செல்லூர் ராஜூ அனைவரும் எளிதில் அணுகும் வண்ணம் நடக்கக்கூடியவர். மாற்றுக்கட்சியினரிடமும் கட்சி பேதம் இல்லாமல் பழகக்கூடியவர் என்று மதுரையில் பேச்சு உண்டு.

இந்நிலையில் அவர் இன்று மதுரையில் அளித்த பேட்டி திமுகவினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார்.

அவரது உடல்நிலை குறித்து நேற்று முதல்வர் பழனிசாமி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தார். பின்னர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் உத்தரவின்பேரில் நேரில் சென்று சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தார். அரசு வேண்டிய உதவிகள் அளிக்கும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ஜெ.அன்பழகன் உடல் நலம் குறித்தும் அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கேட்கப்பட்டது.

”எங்களது சக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன். அவர் திமுகவின் கொள்கையில் மிகப்பெரிய பிடிப்பு உள்ளவர். எங்களுடைய ஆட்சியை, எங்கள் கட்சியை அதிகமாக விமர்சித்தது யார் என்றால் அன்பழகன்தான். கொள்கை மாறுபட்டாலும் அவர் எங்களுடைய சொத்து. திராவிட இயக்கத்தின் சொத்து. அதன் அடிப்படையில்தான் அவர் நலம் பெற முதல்வரும், துணை முதல்வரும் முயல்கிறார்கள். அதுதான் உண்மை. நிதர்சனமான உண்மை”.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தார்.

அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தும் அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேட்டி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x