

‘‘கரோனாவிற்குப் பிறகு புதுப்புது அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கையில் அதிமுக மாவட்டத் தகவல் தொழில்நுட்ப பிரிவு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். எம்எல்ஏ நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளர் கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கட்டிடத்தை திறந்து வைத்து அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: தகவல் தொழில்நுட்பப் பிரிவின் அருமை, பெருமை எல்லாம் தேர்தல் நேரத்தில் தான் தெரியும்.
முன்பெல்லாம் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு தகவல் சொல்லவில்லை என்று அடிக்கடி குறை சொல்லுவர். தகவல் தொழில்நுட்ப பிரிவு வந்தபிறகு அது இல்லாமல் போய்விட்டது.
வரும் தேர்தலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவைப் பயன்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சிலசமயங்களில் முதல்வரிடம் நான் பேசும்பாது ‘தேர்தல் வரப்போகும் நேரத்தில் தொய்வாக இருக்குதே என்று கேட்பேன்,’ அதற்கு அவர் ,‘பயப்படாதீங்க, அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். என்ன செய்யனுமோ, அனைத்தையும் மக்களுக்கு செய்வேன். கொஞ்ச நாள் பொறுத்திருந்து பாருங்கள்,’ என்று சொன்னார்.
நாம் சொல்லி தான் முதல்வருக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை. அதற்கு முன்பே அவரே அறிந்து செய்துவிடுகிறார். அத்தகைய முதல்வர் நமக்கு கிடைத்துள்ளார். முதல்வரும், துணை முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். கரோனாவிற்குப் பிறகு புதுப்புது அறிவிப்புகளை முதல்வர் வெளியிட உள்ளார், என்று கூறினார்.