

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டியது. இதனால் ஓட்டு வீடிகள் இடிந்து விழுந்தன. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முதல் இன்று காலை வரை மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை கொட்டியது.
இதனால் ஆறு, கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கெனவே குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னிப்பூ சாகுபடி நடவுப்பணிகள் குமரி மாவட்டத்தில் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் கனமழை வேளாண் பணிகளுக்கு கைகொடுத்துள்ளது. அதே நேரம் தாழ்வான பகுதியில் உள்ள வயல்பரப்புகளில் நாற்றுக்கள் மூழ்கி வருகின்றன. நேற்று அதிகபட்சமாக இரணியலில் 88 மிமீ., நாகர்கோவிலில் 79 மிமீ., மழை பெய்திருந்தது.
கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மாவட்டத்தில் ஆங்காங்கே ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் இடிந்து விழுந்தன. கோட்டாறில் சுவரோடு வீடு இடிந்து விழுந்தது. அப்போது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டன. தாழ்வானப் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமான 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 966 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 38.40 அடியாக உயர்ந்தது. இதைப்போல் பெருஞ்சாணி அணைக்கு 617 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. 77 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 47.15 அடியாக உயர்ந்துள்ளது.
சிற்றாறு அணைகள் 14 அடியை தாண்டியுள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 3.7 அடியாக உயர்ந்துள்ளது. மயிலாடி 64 மிமீ., தக்கலை 54, குழித்துறை 42, சிற்றாறு ஒன்று 40, சிற்றாறு இரண்டு 32, பாலமோர் 30, மாம்பழத்துறையாறு 77, கோழிப்போர்விளை 70, முள்ளங்கினாவிளை 78, ஆனைக்கிடங்கில் 83 மிமீ., மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.