எலும்பு முறிவு, ரத்தக் குழாய் வீக்கத்துக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை; விபத்தில் சிக்கிய கட்டிடத் தொழிலாளியின் காலைக் காப்பாற்றிய கோவை அரசு மருத்துவர்கள்

அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்துவரும் நாகராஜ்.
அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்துவரும் நாகராஜ்.
Updated on
1 min read

சாலை விபத்தில் அடிபட்டு ரத்தக் குழாயில் வீக்கம், இடது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டவருக்கு ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மரப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (23). கட்டிடத் தொழிலாளியான இவர், கடந்த மே 12-ம் தேதி சாலை விபத்தில் சிக்கினார். பின்னர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மே 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்குப் பிறகு அவரது இடது கால் தொடையில் எலும்பு முறிவு மற்றும் அடிபட்டதால் ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, ஒரே அறுவை சிகிச்சை மூலம் எலும்பு முறிவு மற்றும் ரத்தக் குழாய் வீக்கத்தைச் சரிசெய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, முடநீக்கியல் துறை நிபுணர்கள் வெற்றிவேல் செழியன், கார்த்திகேயன், கண்ணன், முகுந்தன், மாரிமுத்து, ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் வடிவேலு, தீபன்குமார், மயக்கவியல் நிபுணர்கள் ஜெய்சங்கர், பூங்குழலி ஆகியோர் குழுவாக இணைந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் காளிதாஸ் கூறும்போது, "முதலில் ரத்தக் குழாய் வீக்கத்தைச் சரிசெய்து, பின்னர் எலும்பு முறிவுக்கு உள்கம்பி பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரத்தக் குழாய் பரிசோதனையில், வீக்கம் சரிசெய்யப்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூ.2 லட்சம் வரை செலவாகியிருக்கும். இங்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், நாகராஜின் இடது கால் காப்பாற்றப்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in