

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, மாதாந்திர தவணை செலுத்தத் தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டுத் தள்ளுபடி செய்திருக்கிறது தமிழக அரசு.
இதையொட்டி கோவை மாவட்டம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
“கோவை மாவட்ட வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தவணை முறையின் மூலம் பலர் மனை, வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள். அவர்களில் ஏற்கெனவே முழுத் தொகையும் செலுத்தியவர்கள் நீங்கலாக ஏனைய ஒதுக்கீடுதாரர்கள், தாங்கள் ஒதுக்கீடு பெற்ற கோவை வீட்டுவசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டித் தள்ளுபடி போக மீதம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி விற்பனைப் பத்திரம் பெற்றுப் பயனடையலாம்.
இச்சலுகை செப்டம்பர் 30 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாலும், மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்பதாலும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.