சொத்தை பிரித்து கொடுத்த பின்னர் வீட்டை விட்டு வெளியேற வற்புறுத்தல்: திருப்பூரில் மனைவி மற்றும் மகனுக்கு அரிவாள் வெட்டு; தந்தை கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சொத்தை பிரித்து கொடுத்த பின்னர் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய மனைவி, மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

"திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயராஜ் (67). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி (56). தம்பதியரின் மகன்கள் விக்னேஷ் மற்றும் வினோத். திருப்பூர் கருவம்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். மூத்த மகன் விக்னேஷ் அரூரில் உள்ளார்.

இந்நிலையில், விஜயராஜ் கடந்த 7 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, குடும்பத்துடன் சேர்ந்து வாழத் தொடங்கி உள்ளார். அப்போது, தன்னிடமிருந்த நிலத்தை தலா 75 சென்ட் வீதம், மகன்கள் இருவருக்கும் பிரித்து எழுதித் தந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மனைவி விஜயலட்சுமி மற்றும் மகன் வினோத் ஆகியோர் விஜயராஜை வீட்டை விட்டு வெளியேறும்படி தொடர்ந்து வற்புறுத்தி உள்ளனர். இதனால் குடும்பத்தில் பிரச்சினை எழுந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டை விட்டுச் செல்லுங்கள் என மனைவி மற்றும் மகன் விஜயராஜை விரட்டி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த விஜயராஜ், இன்று (ஜூன் 6) காலை மனைவி மற்றும் மகன் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த அரிவாளால் இருவரையும் வெட்டினார். இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு, போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் விஜயராஜை கைது செய்தனர். காயம் அடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மத்திய போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in