

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்கான தயாரிப்புகளில் ஈடுபடுவதால், கோவில்பட்டி பள்ளிகளில் செயல்பட்ட நகராட்சி தினசரி சந்தை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் கோவில்பட்டி மக்கள் அதிகளவு கூடும் இடமாக இருந்து நகராட்சி தினசரி சந்தை 3 ஆக பிரிக்கப்பட்டது.
கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையம், ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வளாகங்களில் தினசரி சந்தை செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜூன் 15-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான வேதியல், கணக்குப்பதிவியல் தேர்களும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தயாரிப்பு பணிகள் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வந்த தினசரி சந்தை, செண்பகவல்லி அம்பாள் கோயில் பின்புறமுள்ள காந்தி மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதற்காக அப்பகுதி முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டு, தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 64 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கடைகளுக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க ஏதுவாக கோடுகள் வரையப்பட்டுள்ளன.
இன்று முதல் தினசரி சந்தை இங்கு செயல்பட தொடங்கியது. கடைகளுக்கு வரும் மக்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி நகராட்சி பணியாளர்கள் மூலம் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கடைகளின் முதன்மை விற்பனையாளர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையாளர் ராஜாராம் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.