

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 வயது கர்ப்பிணிப் பெண் பிரசவ அறுவை சிகிச்சையில் உயிரிழந்த நிலையில் அவருக்குக் கரோனா பாதிப்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயதுள்ள 8 மாதக் கர்ப்பிணிப் பெண் அங்குள்ள அரசு மருத்துமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 29-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் கடந்த 31-ம் தேதி இரவு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவிக்க முடிவானது. அதன்படி, மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று (ஜூன் 5) அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது, இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் இன்று (ஜூன் 6) காலை தாயும் உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ அலுவலர்கள் கூறும்போது, "இங்கு கரோனா சிகிச்சை வார்டு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு வார்டிலும் தினமும் 5 முறை கிருமிநாசினியைக் கொண்டு சுத்தம் செய்து வருகிறோம்.
தற்போது எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததால் வார்டில் தங்கியிருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், அந்தப் பெண்ணின் உறவினர்கள் 10 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரையும் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.