Published : 06 Jun 2020 03:17 PM
Last Updated : 06 Jun 2020 03:17 PM

புதுச்சேரியில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ததில் அலட்சியம்; சவக்குழிக்குள் உருண்டு விழும் உடல்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ  

சவக்குழிக்குள் விழும் உடல்

புதுச்சேரி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அலட்சியத்தொடு ஸ்ட்ரெச்சரில் இருந்து கவிழ்த்துவிட்டதால், அது உருண்டு சவக்குழியில் விழும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் புதுச்சேரி மூலகுளம் அருகே கோபாலன்கடை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அங்கு நேற்று (ஜூன் 5) அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். தொடர்ந்து, அவருக்குப் பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஊசுடு தொகுதிக்குட்பட்ட கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு முழுக் கவச உடையில் இருக்கும் 4 சுகாதாரப் பணியாளர்கள் ஆம்புலன்ஸில் இருந்து உடலை ஸ்ட்ரெச்சர் மூலம் ஏற்கெனவே தயாராக தோண்டி வைக்கப்பட்டிருந்த சவக்குழியின் அருகில் எடுத்து வந்தனர். அப்போது திடீரென அலட்சியமாக ஸ்ட்ரெச்சரில் இருந்து உடலைக் கவிழ்த்து விட அது உருண்டபடி சவக்குழிக்குள் விழுந்தது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலைப் பணியாளர்கள் அலட்சியமாகக் சவக்குழியில் வீசுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உலக சுகாதார நிறுவனமும், இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகமும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது குறித்த வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறது.

அப்படி இருந்தும் பயத்தின் காரணமாக பணியாளர்கள் அதை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்றும் பலர் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணியில் வருவாய்த்துறையினர், கொம்யூன் பஞ்சாயத்தினர் ஈடுபட்டனர்.

அப்போது 12 அடி ஆழம் கொண்ட பள்ளத்தின் அருகே உயிரிழந்தவரின் உடலைக் கொண்டு சென்றபோது ஊழியர் ஒருவருடைய கை நழுவியதால் அவருடைய உடல் உருண்டு பள்ளத்தில் விழுந்துள்ளது. குறிப்பாக, புதுச்சேரியில் கரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வது இதுவே முதன்முறை என்பதால், ஊழியர்கள் பயத்தின் காரணமாக இது நடைபெற்றிருக்கலாம். இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க சம்மந்தப்பட்ட பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x