கைகளைக் கழுவ தானியங்கி சுத்திகரிப்பான் கருவி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், கைகளைச் சுத்தமாகக் கழுவுவதும் ஒன்று. பல இடங்களில் தண்ணீர், கோப்பை, சோப்பு, கிருமிநாசினி போன்றவை வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றைக் கைகளால் தொட வேண்டியிருக்கிறது. இந்நிலையில், சுத்திகரிப்பான் திரவத்தைத் தெளிக்கும் தானியங்கிக் கருவி, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் ப.முரளி அர்த்தனாரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோவையில் உள்ள பண்ணை இயந்திரவியல் துறை ஆகியவை இணைந்து இந்தத் தானியங்கிக் கருவியை உருவாக்கியிருக்கின்றன.

இந்தக் கருவி, பேட்டரியால் இயங்கும் தெளிப்பானின் இணைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணைப்பு, கைகளை அருகில் கொண்டு சென்றாலே சுத்திகரிப்பான் திரவத்தைக் கைகளில் தெளித்துவிடும். கலனைக் கைகளால் தொட வேண்டியதே இல்லை.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர்கள், தலைவர்கள் முன்னிலையில் இக்கருவிக்கான செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. கருவியை உருவாக்கிய பேராசிரியர்களைப் பாராட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளுக்குத் தேவைக்கேற்பத் தயாரித்து வழங்குமாறு துணைவேந்தர் அறிவுறுத்தியிருக்கிறார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in