

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக, திமுக இன்று (ஜூன் 6) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை - குரோம்பேட்டையில் உள்ள ரேலா இன்ஸ்டிட்யூட் அண்ட் மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகனின் உடல் நலன் குறித்து நாள்தோறும் தொலைபேசி வாயிலாக விசாரித்தறிந்து வந்த நிலையில், இன்று காலை, அம்மருத்துவமனைக்கு நேரில் சென்று, ஜெ.அன்பழகனுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவினர்களான அம்மருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகமது ரேலா, இளங்குமரன் ஆகியோரிடத்தில், அவரது உடல் நலன் குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
திமுக தலைவருடன் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருந்தார்.
மருத்துவர்களுடனான இச்சந்திப்பின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் இருந்தார்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.