தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டணம் எவ்வளவு?- தமிழக அரசு அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

தனியார் மருத்துவமனைகளில் லேசான அறிகுறிகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளிடம் சிகிச்சைக்காக வசூலிக்கப்பட வேண்டிய அதிகபட்ச கட்டணம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 6) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழக அரசு கரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 3-ம் தேதி தமிழக அரசு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா தொற்றுக்குக் கட்டணமில்லாமல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஒர் ஆணை வெளியிடப்பட்டது.

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளை அணுகும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்களை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான செய்திகள் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனைத் தவிர, இந்திய மருத்துவச் சங்கம் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் கரோனா தொற்று கண்ட நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் தொடர்பாக சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர்.

இதனைத் தொடார்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனியார் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளிடமிருந்து பெற அனுமதிக்கப்படவேண்டிய தினசரி கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தனது அறிக்கையினை அரசிடம் அளித்தது. இவ்வறிக்கையை கவனமுடன் ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு, மக்கள் நலன் கருதி கீழ்காணும் கட்டணங்களை நிர்ணயிக்கவும் சில நிபந்தனைகளை விதிக்கவும் உத்தேசித்து அவ்வாறே ஆணையிடுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்காக வசூலிக்கப்படவேண்டிய கட்டண விபரங்கள்

கட்டண விபரங்கள்
கட்டண விபரங்கள்

அறிவிக்கப்பட்டுள்ள இக்கட்டணங்கள் அதிகபட்ச கட்டணமாகும். இக்கட்டணத்திற்கு மேலான தொகையை நோயாளிகளிடமிருந்து வசூலிக்கக் கூடாது. கரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் நடவடிக்கைகளின் மூலம் கரோனா சிகிச்சை முறைகள் மேலும் வலுப்படும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in