Published : 06 Jun 2020 09:36 AM
Last Updated : 06 Jun 2020 09:36 AM

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சேவை இல்லங்களுக்கு உதவ வேண்டும்; வாசன் வேண்டுகோள்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சேவை இல்லங்களுக்கு உதவ வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 6) வெளியிட்ட அறிக்கை:

"ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஏழை மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு உறைவிடம், உணவு மற்றும் மருத்துவ வசதி ஆகியவை தரும் சேவை நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

அவற்றில் மத்திய அல்லது மாநில அரசுகளின் உதவிபெற்றும் பெறாமலும் சமூகத்தில் வசதி படைத்தவர்கள் தொழில் நிறுவனங்கள் நல்ல மனம் படைத்த தனிநபர்களின் நன்கொடையால் நடைபெற்று வருகின்றன.

கரோனா தொற்றால் தொடரும் ஊரடங்கின் காரணமாக இந்நிறுவனங்களுக்கு வரும் உதவிகளும் நன்கொடைகளும் தடைபட்டுவிட்டன. தனியாக தாங்களே சமாளிக்கும் பொருளாதார வலிமையும் இந்நிறுவனங்களுக்கு இல்லை. ஆகவே அவற்றை நடத்த முடியாமல் தள்ளாடி வருகின்றன.

இச்சூழலில் தமிழ்நாடு அரசு இத்தகைய சேவை நிறுவனங்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்க வேண்டும். அதோடு மருத்தவ உதவியும் மருந்துகளும் இலவசமாக வழங்க வேண்டும்.

இதன் மூலம் தமிழகத்தில் இயங்கி வரும் 1,200-க்கும் மேற்பட்ட சேவை இல்லங்களில் தங்கி இருண்ட எதிர்காலத்தை எதிர்கொண்டுள்ள சுமார் மூன்று லட்சம் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட ஏழை மாற்றுத்திறனாளிகளின் துன்பத்தையும் துயரத்தையும் போக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்வர வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x