Published : 06 Jun 2020 07:04 AM
Last Updated : 06 Jun 2020 07:04 AM

மனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் அவதிப்படும் மூதாட்டி- ரேஷன் அட்டை இல்லாததால் உதவிப் பொருட்கள் கிடைக்காமல் தவிப்பு

காஞ்சிபுரம் அருகே மனவளர்ச்சி குன்றிய மகன், தம்பியுடன் மூதாட்டி ஒருவர் தனியே தவித்து வருகிறார். ரேஷன் அட்டை இல்லாததால் அரசு கொடுத்த கரோனா உதவித் தொகை, பொருட்களை பெற முடியாமல் தவித்து வருகிறார்.

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள்(62). இவருக்குமுனுசாமி(25) என்ற மனவளர்ச்சி குன்றிய மகன் உள்ளார். பச்சையம்மாளின் தம்பி பிச்சாண்டியும்(40) மனவளர்ச்சி குன்றியவர்.

தம்பியை கவனித்துக் கொண்டிருந்த தாய், தந்தையர் இறந்ததால் பச்சையம்மாள் தனது தம்பியை பார்த்துக்கொள்ள மோச்சூரில் இருந்து கோவிந்தவாடி அகரம் பகுதிக்கு வந்துவிட்டார். மகன் முனுசாமியையும் உடன் அழைத்து வந்துவிட்டார். இவர்கள் இருவரும் வந்து 5 ஆண்டுகள் ஆகியும் ரேஷன் அட்டை கூட இன்னும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து பச்சையம்மாளிடம் கேட்டபோது, பிச்சாண்டி இதேஊரில் இருந்ததால் அவருக்கு மட்டும் மாதம் ரூ.1000 உதவித் தொகையும், அரிசியும் கிடைக்கிறது. அதை பயன்படுத்திதான் அனைவரும் வாழ்கிறோம். எனக்கோ, எனது மகனுக்கோ ரேஷன் அட்டைகூட இல்லை. நான் பலரிடம் சென்று கேட்டுவிட்டேன். ரேஷன் அட்டை இல்லாததால் கரோனாவுக்காக அரசு வழங்கிய உதவித் தொகை, பொருட்களைக் கூட பெற முடியவில்லை. அரசு எங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும், ரேஷன் அட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்பா.பொன்னையா கூறும்போது, “அந்த குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இருவருக்கும் ரூ.1500 உதவித் தொகைக்கான ஆணை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

அந்தப் பகுதி சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மே 21-ம் தேதிக்குள் உதவித் தொகைக்கான ஆணை கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை. கரோனா பாதிப்புகாலம் என்பதால் அவர்களுக்கு விரைவில் உதவித் தொகைக்கான ஆணையும், குடும்ப அட்டையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் குறைந்தபட்சம் பிச்சாண்டியின் குடும்ப அட்டையிலாவது இவர்கள் இருவர் பெயரையும் சேர்க்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x