

கரோனாவால் பாதிக்கப்பட்ட35-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1600-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்றார்.
பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 260-க்கும் மேற்பட்ட கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு மிக அருகில் உள்ள மாவட்டம் என்பதால் இங்கு தடுப்புப் பணிகள் சவாலாக உள்ளன.
செங்கல்பட்டு மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்ட 35-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 37 குழந்தைகளுக்கும், 8 டயாலிஸிஸ் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நோயை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட எஸ்பி கண்ணன், சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.