இலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது

இலவச மின்சாரத் திட்டத்தை மாற்ற வேண்டிய நேரமிது
Updated on
2 min read

விவசாயத்துக்கு இலவச மின்சாரம் அளிப்பது மிகப்பெரும் வாக்கு வங்கி என அரசியல் கட்சிகள் கருதும் நிலை மாறி, இத்திட்டத்தில் காணப்படும் குறைகளை பலரும் சுட்டிக்காட்டத் தொடங்கி உள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட இலவச மின்சார விநியோகத்தை எதிர்த்துள்ளார். இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு இத்திட்டத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதன்படி இலவச மின் விநியோகத்துக்குப் பதில் விசாயிகளுக்கு நேரடி பண சலுகையை (டிபிடி) அளிக்கலாம் எனவும், இதை ஏற்கும் மாநில அரசுகளுக்கு கூடுதல் கடன் பெறும் வசதி அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேரடி பண பரிமாற்ற (டிபிடி) சலுகையை மின்சார விநியோகத்துக்காக மத்திய அரசு பரிந்துரைப்பது இது முதல் முறையல்ல. ஆனால் இம்முறை கால வரையறையுடன் இதை செயல்படுத்த உள்ளது. அதாவது இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் மாநிலத்தில் ஒரு மாவட்டத்திலாவது இந்த முறையை அமல்படுத்தி இருக்க வேண்டும். அடுத்த நிதி ஆண்டு முதல் இதை மாநிலம் முழுவதும் படிப்படியாக செயல்படுத்த வேண்டும் என்று கால வரையறை நிர்ணயித்துள்ளது.

தமிழகத்தில் இலவச மின்சார திட்டமானது முதல் முதலில் 1984-ம் ஆண்டுசெப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அரசு பரிந்துரைத்துள்ள இத்திட்டத்தை கடுமையாக தமிழகம் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்துள்ளார். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இலவச மின் விநியோக திட்டம் உள்ளது. இவை எத்தகைய நிலைப்பாட்டை அறிவிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனாலும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தனது முதலாவது பதவிக் காலத்தில் இலவச மின் விநியோகத்தை ரத்து செய்தார். ஆனால் தற்போது இத்திட்டத்துக்கு பெரும் ஆதரவை தெரிவித்து வருகிறார்.

மின்சார மானியம்

கடந்த 15 ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம்தான் இத்திட்டத்தை ரத்து செய்த முதலாவது மாநிலமாகும். இத்திட்டத்தை அறிவித்த ஓராண்டிலேயே இதை ரத்து செய்தது. 2008-ம் ஆண்டில் இருந்துஇலவச மின் விநியோகத்தை அமல்படுத்தி வந்த கர்நாடக மாநிலம், தற்போது டிபிடி திட்டத்தை வரவேற்றுள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே கோடிட்டு காட்டியிருந்தார்.

தென் மாநிலங்கள் இலவச மின்சாரத்துக்கு அளிக்கும் மானியம் ரூ.33 ஆயிரம் கோடியாகும். மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் உள்ள சூழலில் இந்தத் தொகையை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றன. மேலும் தற்போது கரோனாவைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட ஊரடங்கு மிகப் பெரும் நெருக்குதலாக அமைந்துள்ளது.

நிதி நெருக்கடி ஒருபுறம் இருந்தாலும், இதை நாடு முழுவதும் அமல்படுத்துவதில் சில மோசமான விளைவுகளும் ஏற்பட்டுள்ளது கண்கூடு. இலவச மின்சாரம் கிடைப்பதால் வயலுக்கு நீர் பாய்ச்சுவது அளவுக்கு அதிகமாக நீர் விரயமாகிறது. அதேபோல மின்சாரமும் விரயமாவது தெரிய வந்துள்ளது. மானிய உதவி என்ற பெயரில் 2 மிகப் பெரும் வளங்கள் (மின்சாரம், நீர்) விரயமாவதை ஏற்க முடியாது என்றே அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நிலத்தடி நீர் வளத்தை உறிஞ்சுவதில் 25,100 கியூபிக் மீட்டர் தண்ணீரை பயன்படுத்துகிறது. இந்த அளவானது அமெரிக்காவும், சீனாவும் ஒருங்கிணைந்து பயன்படுத்தும் அளவை விட அதிகம் என்று கடந்த ஆண்டு இந்திய புள்ளியியல் மையத்தைச் சேர்ந்த பரத் ராமசாமி தெரிவித்திருந்தார். காவிரி டெல்டா பகுதி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் சிங்ருர் மாவட்டம் ஆகிய இரண்டிலுமே நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

இது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் அபாயத்தை உணர்த்துகிறது. விவசாயிகள் தங்களது விவசாயப் பணிகள் தொடர, நீர்மூழ்கி மோட்டார், அதி உயர் அழுத்த பம்ப்செட்களை பயன்படுத்தி நீரை கணிசமாக உறிஞ்சுகின்றனர்.

இலவச மின்சாரம் விவசாயத்துக்கு அளிக்கப்படுவதால் அதிக அளவில் பம்ப்செட் உபயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் கர்நாடக மாநிலமாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட பம்ப் செட்களின் எண்ணிக்கை 17 லட்சமாகும். தற்போது இந்த எண்ணிக்கை 30 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் இந்தத் திட்டத்தை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் இத்திட்டத்தில் மின் மீட்டர் பயன்படுத்தப்பட்டுள்ள விதம், இதற்கென தனி மின் விநியோக கட்டமைப்பு, டிரான்ஸ்பார்மர் நிறுவுவது உள்ளிட்டவையும் பிரச்சினையாகும். இதில் மின் விநியோக பொறுப்பை ஏற்றுள்ள நிறுவனங்கள் தங்களது நஷ்டத்தை குறைத்துக் காட்ட விவசாயத் துறைக்கு மின் விநியோகத்தை வழங்குவதில் சில தில்லுமுல்லுகளை செய்வதும் கண்கூடு.

இலவச மின் விநியோகத்தை ஆதரிக்கும் சிலர், உணவு பாதுகாப்பு திட்டத்தை உறுதி செய்யும் அதே வேளையில் விவசாயத்துக்கு இலவச மின்சார சப்ளையும் அவசியம் என்றும் இதுதான் நிலமில்லா விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது என்றும் குறிப்பிடுகின்றனர். வாய்க்கால் மூலமாக நீர் பெறும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தேவையில்லை.

வாய்க்கால் பாசன வசதி பெறாத விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதை வரையறுப்பது ஒன்றும் கடினமான பணியாக இருக்காது. அதேசமயம் நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயிகள், எந்த அளவுக்கு தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதை கட்டாயம் வரையறுக்க வேண்டும்.

தற்போது கரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய தருணத்தில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. அந்த வகையில் மின் துறையில் அர்த்தமுள்ள பயனைத் தருவதாக அது இருக்க வேண்டும். அதேசமயம் அரசியல் கட்சிகள் மத்தியிலும் இலவச மின்சாரம் குறித்த கண்ணோட்டமும் மாற வேண்டியது மிகவும் அவசியம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in