

திமுக நிர்வாகிகள் அமைச்சர் வேலுமணி மீது புகார் அளிக்க அதன் பேரில் அவர்கள் கைது செய்யப்படுவதால் திமுகவினருக்கும், அமைச்சர் வேலுமணிக்கும் மோதல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கோவை மாவட்ட பிரச்சினைக்காக தனிக்கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டுகிறார்.
இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மாவட்ட - ஒன்றிய, நகர,- பகுதி கழகச் செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள், சட்டத்துறை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நாளை மறுநாள் (07-06-2020), ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது, ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பொருள்: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல்கள் மற்றும் அதனை எதிர்த்துப் போராடும் கட்சியினர் மீது காவல்துறையை ஏவி பொய் வழக்குப் போடும் அராஜக நடவடிக்கைகள் குறித்து”.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.