

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறை குறித்து உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தலைக்கட்டுபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் விரைவில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எவ்வித வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்படவில்லை.
வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டால், பூஜைகள், அன்னதானம், கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இத்தகைய சூழலில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படவில்லை எனில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் பரவும் நிலை உருவாகும்.
ஆகவே, கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் உள்ளே செல்பவர்கள் மாஸ்க்குகள், கையுறைகள் உள்ளிட்டவற்றை அணிவதையும், சானிடைசர்கள் பயன்படுத்துவதை உறுதிப் படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கையில், கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறை குறித்து உரிய வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.