

ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் உள்ளிட்ட 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 3-ம் தேதி வரை வெளி மாநிலங்களிலிருந்து வந்த 28 பேர் உள்ளிட்ட 94 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார், 58 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். மீதியுள்ளவர்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தங்கச்சிமடம் அரியாங்குண்டு பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண், ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் வக்கீல் தெருவைச் சேர்ந்த 41 வயது ஆண், பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்த 35 வயது ஆண், கீழக்கரை புதுத் தெருவைச் சேர்ந்த 21 வயதுப் பெண் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரிவில் பணிபுரியும் 58 வயதுள்ள வட்டாட்சியர் ஒருவர் என 5 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் ஏற்கெனவே பிரபல தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் வட்டாட்சியருக்கு கரோனா தொற்று பாதித்திருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.