

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 3,500-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. மாநகரில் தினசரி சராசரியாக 1,050 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு ஏறத்தாழ 250 ஏக்கரில் குப்பை கொட்டப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பை மக்கும், மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பை மூலம் உரம் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தவிர, வெள்ளலூர் குப்பைக்கிடங்கின் ஒரு பகுதியில் 65 ஏக்கரில் ஏறத்தாழ 9.40 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு கலப்புக் குப்பை நீண்ட நாட்களாகத் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மாசடைகிறது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இங்கு மலை போல் தேங்கியுள்ள கலப்புக் குப்பையை அகற்ற மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஏசுதாஸ் உள்ளிட்டோர் வலியுறுத்தி, அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தேங்கியுள்ள குப்பையை அழிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. இதற்கிடையே, நீண்ட ஆண்டுகளாக இந்தக் குப்பையை முறையாக தரம் பிரித்து அழிக்க மாநகராட்சி மேற்கொண்ட எந்த திட்டங்களும் பலன் அளிக்கவில்லை. இக்குப்பையை தரம் பிரித்து அழிக்கும் பயோ-மைனிங் திட்டம் என கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பேச்சளவிலேயே இருந்தது. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தலைத் தொடர்ந்து பயோ-மைனிங் திட்டத்தைச் செயல்படுத்தும் பணிகளை கோவை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தினர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.60.16 கோடி மதிப்பில் பயோ-மைனிங் திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசு அனுமதி பெறப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் இத்திட்டத்தை செயல்படுத்தும் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்ய, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்நிறுவனத்தினர் ரூ.60.15 லட்சம் வைப்புத் தொகையை மாநகராட்சியிடம் செலுத்தியதைத் தொடர்ந்து, பணி ஆணை சமீபத்தில் மாநகராட்சி நிர்வாகத்தினர் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து வெள்ளலூர் குப்பைக்கிடங்கு வளாகத்தில் பயோ-மைனிங் திட்டப்பணி இன்று (ஜூன் 5) தொடங்கப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று திட்டப்பணியைத் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முறையாக மேற்கொள்ள வேண்டும்
இது தொடர்பாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஏசுதாஸ் கூறும்போது, "வெள்ளலூர் குப்பைக்கிடங்கை சுற்றிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்குப்பைக்கிடங்கில் மேற்கொண்ட எந்த திட்டங்களும் முறையாக, முழுமையாக செயல்படுத்தியதில்லை. இக்குப்பைக் கிடங்கில் மலை போல் கொட்டப்பட்டுள்ள கலப்புக் குப்பையால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதை அகற்ற பயோ-மைனிங் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகத்தினர் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தொடங்கியுள்ளனர்.
இந்தத் திட்டத்தைக் குளறுபடிகள் இல்லாமல் முழுமையாக மேற்கொண்டு தேங்கியுள்ள குப்பையை அழிக்க வேண்டும். நிதி வீணடிப்பை தவிர்க்க வேண்டும். மேலும், வழக்கம் போல் பொறியாளரை நியமித்து கண்காணிக்காமல், திடக்கழிவு மேலாண்மையில் வல்லுநர் ஒருவரை நியமித்து இந்த திட்டம் செயல்படுத்துவதை மாநகராட்சி நிர்வாகத்தினர் கண்காணிக்க வேண்டும்" என்றார்.
24 மாதங்களில் முடிக்கப்படும்
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "இந்த பயோ-மைனிங் திட்டத்தை 24 மாதங்களில் செயல்படுத்தி முடிக்க அந்நிறுவனத்திடம் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தினர் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி 14 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஒரு டன் குப்பையைத் தரம் பிரித்து அழிக்க அந்நிறுவனத்துக்கு ரூ.640 கட்டணமாக வழங்கப்படும்.
இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பையை வகை வாரியாகப் பிரித்து, 180 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் அளவுக்கு வரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அகற்றப்படும். மக்கும் குப்பை உரமாக்க அழிக்கப்படும். மக்காத குப்பை மாற்று வழிகளில் அழிக்கப்படும் என்பதே பயோ-மைனிங் திட்டமாகும்" என்றனர்.