

கரோனா விவகாரத்தில் புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் அதிருப்தி தருவதாக முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்து மனு தந்த துணை சபாநாயகர் பாலன் தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி மீது காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகளின் அதிருப்தி அதிகரித்து வருவது உறுதியாகியுள்ளது.
புதுச்சேரி அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலு மீது சபாநாயகர் சிவக்கொழுந்து விசாரணை நடத்தி வருகின்றார். இதற்காக நேற்று முன்தினம் ஆஜரான பின்னர் தனவேலு, புதுச்சேரியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன், எம்எல்ஏக்கள் லட்சுமி நாராயணன், ஜான்குமார் ஆகியோர் முதல்வர் மீது அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இத்தகவலுக்கு காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதிகள் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
அவர் கூறியதைப் போன்று முதல்வருக்கு காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார்.
இந்நிலையில், துணை சபாநயாகர் எம்.என்.ஆர்.பாலன் இன்று (ஜூன் 5) முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரியில் எனது தொகுதியான உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக கரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் வீதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையான வசதிகளை அரசு செய்து தரவில்லை. பலமுறை இதுகுறித்துத் தகவல் தெரிவித்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியில்லை. அரசு இதை கண்டுகொள்ளாமல் உள்ளது. அதிகாரிகளை வேலை வாங்குவது தான் ஆட்சியாளர்களின் வேலை. ஆனால், அதை ஆட்சியாளர்கள் செய்யவில்லை. கரோனா விவகாரத்தில் அரசின் இந்தச் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது.
அரசு சார்பில் வழங்கப்பட்ட காருக்கு டீசல் கூட வழங்க அரசிடம் பணம் இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற்போல் இந்த அரசு செயல்படவில்லை. சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் மக்கள் தெரிவிக்கும் குறைகளை அரசிடம் தெரிவித்தால் அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை".
இவ்வாறு துணை சபாநயாகர் எம்.என்.ஆர்.பாலன் தெரிவித்தார்.