

மத்திய - மாநில அரசுகளை விமர்சிக்கும் நேரங்களைக் கடந்துவிட்டோம் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் என்பது மிக அதிகமாக இருக்கிறது.
இதனிடையே இன்று (ஜூன் 5) உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல். இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு விட்டு, ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது, "'நாமே தீர்வு' என்ற திட்டம் மத்திய - மாநில அரசுகளின் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்ளலாமா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கமல் கூறியதாவது:
"அதை அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. விமர்சன நேரங்களைக் கடந்துவிட்டோம் என்றே நினைக்கிறேன். பக்கத்து மாநிலங்களில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ளனர். முழுமையான வெற்றி என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால் கரோனா அலை என்பது மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கும் என்று உறுதியாகியுள்ள நேரத்தில் விமர்சனம் சொல்வதை விட, எந்த அரசும் இதைத் தனியாகச் செய்துவிட முடியாது.
இதற்கு முன்னுதாரணமாகப் பல அரசுகள் இருந்திருக்கின்றன. மக்கள் உதவியை, தன்னார்வலர்களின் உதவியை ஏற்றுக்கொண்டு அதை நல்வழிப்படுத்தி உபயோகப்படுத்திக் கொண்ட அரசுகள் எல்லாம் நல்ல வெற்றியைக் கண்டிருக்கின்றன. கேரளா, ஒடிசா, கர்நாடகா போன்ற அரசுகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இது விமர்சனம் என்பதை விட சரியான உத்தியாக இருக்கும் என்பது எங்களுடைய கருத்து".
இவ்வாறு கமல் தெரிவித்தார்.