

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் பறிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை வலியுறுத்தி காங்கிரஸ் எம்எல்ஏ கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, தொடர்ந்து முதல்வருக்கு கடிதம் அனுப்பி வருகிறார். அவர் பல வித யோசனைகளையும் அரசுக்கு தெரிவிக்கிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 5) முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
"அகில இந்திய அளவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள மொத்த மருத்துவ பட்டப்படிப்பு இடங்களில் 15 சதவீதம் மருத்துவ படிப்பு இடங்களை மத்திய அரசின் தொகுப்புக்கு என எடுத்துக் கொள்கிறது. ஆனால் எடுத்துக் கொள்ளப்படும் இடங்களில் மத்திய கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீடு சட்டம் 2006-ன்படி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 27 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுக்கவில்லை. இதனால் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் 200, 300 இடங்களையே பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுத்து அநீதியை மத்திய அரசு செய்துள்ளது. 2017-18 இல் மட்டும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான சுமார் ஆயிரத்து 97 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் பறிபோய் விட்டன. இந்நிலையில், இட ஒதுக்கீட்டு கொள்கையை நிறைவேற்றவும், சமூக நீதியை நிலை நாட்டவும் பல அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
அதுமட்டுமின்றி, இது சம்பந்தமாக தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில், புதுச்சேரி அரசின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இதர பிற்படுத்தப்பட்டோரின் உரிமையை பெற்றுத்தர உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இவர், மதுபான கடைகளை அரசே ஏற்பது அல்லது ஏலம் விடுவதால் நிதி அதிகரிப்பு தொடர்பான யோசனைகள், நீதிமன்ற வழக்குகளில் அரசு செயல்பட வேண்டிய விதம் என பலவித கடிதங்களை முதல்வருக்கு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதுதொடர்பாக முதல்வர் தரப்போ மவுனம் காக்கிறது.