

மதுரை அரசு மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் 40 கரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை டீன் சங்குமணி மற்றும் மருத்துவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக வழியனுப்பி வைத்தனர்.
தமிழகத்தல் ‘கரோனா’ நோய்ப் பரவல் அதிகரித்துள்ளது. சென்னை, அதன் சுற்றுவட்டார மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரளவு இந்த நோய்ப் பரவல் கட்டுக்குள் உள்ளது.
ஒரு புறம் நோய் அதிகரித்தாலும், மற்றொரு புறம், மருத்துவர்கள் சிகிச்சையால் இந்த நோயில் இருந்து மீண்டு வீட்டிற்கு திரும்புவதும் அதிகரித்துள்ளது.
தென் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை, ‘கரோனா’ சிகிச்சையில் சிறப்பாக செயல்படுகிறது. இதுவரை 2 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர்.
மற்றவர்கள் சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் மதுரை மாவட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுவதோடு விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மிக மோசமான நோயாளிகள் இங்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
கடைசியாக 22 ‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் 40 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அதிகளவினா நோயாளிகள் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளது, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
14 விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 22 நோயாளிகள், தூத்துக்குடியைச் சேர்ந்த 3 நோயாளிகள், தேனியைச் சேர்ந்த ஒரு நோயாளி உள்பட 40 நோயாளிகள் சிகிச்சை முடிந்து வீட்டிற்குச் சென்றனர்.