

புதுச்சேரியில் ஒரு வாரத்தில் நான்கு கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதுதொடர்பாக மக்கள் மனதில் அச்சம் எழுந்துள்ளது. இவை தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழ்ந்தவையே என தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஜூன் தொடங்கியவுடன் இவ்வார காலத்தில் நான்கு கொலைகள் நடந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மனதில் அச்சம் எழத்தொடங்கியுள்ளது.
ஜூன் மாதம் தொடக்கத்தில் புதுச்சேரியில் சோலை நகரில் மனைவி மேனகா கொலை செய்துவிட்டு கணவர் சுப்பிரமணி தற்கொலை செய்துகொண்டார். குடும்பதகராறில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் குறிப்பிட்டனர்.
ஜூன் 3-ல் நெட்டபாக்கத்தில் வட இந்தியாவை சேர்ந்த இளைஞர் அடித்து கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார். இதில் மூவரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அன்றைய தினமே புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனார் நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் அருள்சாமி (33) கொலை செய்யப்பட்டார். எலெக்ட்ரீஷியனான இவர், செல்போனில் யாரோ அழைத்ததாகக் கூறி அருள்சாமி 3-ம் தேதி மாலை 4 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து இந்திராகாந்தி சிலை அருகே வந்துள்ளார். அப்போது ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை வழக்கில் பெருமாள், தாஸ், வினோத், பிரகாஷ், டேவிட் என 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். டாடா ஏஸ் வாகனம் வாங்கியதால் பணத்தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக திட்டமிட்டு கொலை செய்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (23). இவரது மனைவி காய்த்ரி. இருவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில், திருபுவனை பாளையம் பகுதியில் கழுத்து அறுக்கப்பட்டு ராஜேஷ்குமார் 4-ம் தேதி கொலை செய்யபட்டு கிடந்தார். இது குறித்து திருபுவனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "குடும்ப பிரச்சினை காரணமாக காய்த்ரியின் சகோதரர் செல்வராஜ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. செல்வராஜ் அவரது நண்பர்கள் பிரகாஷ், ராம்குமார் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கினர். 3 பேரும் கரோனா பரிசோதனைக்காக, அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தொடர் கொலைகள் தொடர்பாக சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வாலிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் நான்கு கொலைகள் இவ்வாரத்தில் நடந்துள்ளது. இது நீண்ட கால மோதல் இல்லை. குடும்ப காரணங்களுக்காகவும், தனிப்பட்ட மோதலுமே இக்கொலைகளுக்கு காரணம்" என்று தெரிவித்தார்.