சிறு வணிகர்களுக்கு ரூ.50,000 கடன்; அமைச்சர் செல்லூர் ராஜூவின் அறிவிப்பு உண்மையா? வழிமுறைகள் என்ன? - தினகரன் கேள்வி

டிடிவி தினகரன் - அமைச்சர் செல்லூர் ராஜூ
டிடிவி தினகரன் - அமைச்சர் செல்லூர் ராஜூ
Updated on
1 min read

குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சிறு, குறு தொழில் செய்வோர் குடும்ப அட்டையுடன் கூட்டுறவு வங்கிகளுக்குச் சென்றால் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 5) தன் ட்விட்டர் பக்கத்தில், "குடும்ப அட்டை வைத்திருக்கும் சிறு வணிகர்களுக்கு ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பை நம்பி கூட்டுறவு வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுவதாக செய்திகள் வருகின்றன.

அப்படியொரு கடன் திட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கே வரவில்லை என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுவதாகத் தகவல்கள் வருகின்றன. கரோனா துயரால் ஏற்கெனவே அல்லல்படும் மக்களை இப்படி அலைக்கழிப்பது வேதனைக்குரியது.

அமைச்சரின் அறிவிப்பு உண்மையா? அதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதா? அப்படி ஒதுக்கப்பட்டிருந்தால் அந்த கடனைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன ? என்பனவற்றை எல்லாம் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தமிழக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in