Published : 05 Jun 2020 01:20 PM
Last Updated : 05 Jun 2020 01:20 PM

கரோனாவுக்கு 17 வயதுச் சிறுமி உட்பட 167 பேர் சென்னையில் உயிரிழப்பு; தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனைகளை 30 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை படிப்படியாக 30 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 5) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கரோனா பாதிப்பு மிகவும் தாமதமாக கண்டறியப்பட்டதுதான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறியுள்ள நிலையில், தொற்று முற்றுவதற்கு முன்பாகவே, அதைக் கண்டுபிடித்து சிகிச்சை தொடங்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

கரோனா வைரஸ் தாக்குதலால் தமிழ்நாட்டில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 167 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக, சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயதுச் சிறுமி அடுத்த 4 மணி நேரத்தில் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த வாரம் வரை 0.67% ஆக இருந்து வந்த உயிரிழப்பு விகிதம், இப்போது 0.80% ஆக அதிகரித்திருக்கிறது. இந்திய சராசரியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்றாலும் கூட, தமிழகத்தின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது நமக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது.

சென்னையில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதற்கு காரணம் தொற்று பாதிப்புகள் மிகவும் தாமதமாக கண்டுபிடிக்கப்படுவது தான் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். நேற்று உயிரிழந்த 17 வயதுச் சிறுமி தான் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் மிகக்குறைந்த வயதுடையவர் ஆவார். அவருக்கு முதல் வகை நீரிழிவு நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே கண்டுபிடித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பதுதான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் ஒரே தீர்வாகும். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; மருத்துவ வல்லுநர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதை உணர்ந்து தமிழக அரசு கடந்த சில நாட்களாக சென்னையில் கரோனா சோதனைகளை அதிகரித்திருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி 11 ஆயிரத்து 94 சோதனைகளும் 3 ஆம் தேதி 14 ஆயிரத்து 101 சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், நேற்று 16 ஆயிரத்து 447 சோதனைகளை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுநர்கள் குழுவே முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த எண்ணிக்கை இப்போது சற்று கூடுதலாகியிருக்கக் கூடும். அவர்களை விரைந்து கண்டுபிடித்து மருத்துவம் அளிக்க வேண்டுமானால், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரம் பேராவது ஒரு நாளைக்கு கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் இப்போது 74 ஆய்வகங்கள் உள்ள நிலையில், அவற்றில் தினமும் அதிகபட்சமாக 30 ஆயிரம் சளி மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும். நேற்றைய நிலவரப்படி ஆய்வுகளின் எண்ணிக்கையை 16 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ள தமிழக அரசு, படிப்படியாக முழுத்திறனையும் எட்டுவதற்கு முன்வர வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட பல மடங்கு அதிகரிக்கும் என்றாலும் கூட, அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி விட முடியும்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது முழுக்க முழுக்க அரசின் கடமை என்று நினைத்து பொதுமக்கள் ஒதுங்கி இருந்து விடக் கூடாது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் தான் என்பதால், அவர்கள் தான் அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிகச்சிறிய அளவில் நோய் அறிகுறிகள் இருந்தால் கூட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று கரோனா ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அதேபோல், நோய் பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் தாங்களாக முன்வந்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது; அதுமட்டுமின்றி, அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவுவதும் முழுமையாக தடுத்து நிறுத்தப்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை படிப்படியாக 30 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சமாக ஒரு சில நாட்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளில் வாழும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x