

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பிப்.19-ம் தேதி 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கியது. முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. கரோனா ஊரடங்கால் மார்ச் 24-ல் அகழாய்வு பணியை தொல்லியல் துறை நிறுத்தியது.
ஊரடங்கு தளர்வால் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வுப் பணி தொடங்கியது. தொடர்ந்து மே 23-ல் முதல் முறையாக மணலூரிலும் பணி தொடங்கியது. மே 27-ல் கொந்தகையில் பணி தொடங்கியது.
மே 28-ல் பெய்த பலத்த மழையால் அகழாய்வு நடந்த இடங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. தண்ணீர் வற்றிய நிலையில் சில தினங்களுக்கு முன் மீண்டும் பணிகள் தொடங்கின.
மணலூரில் தோண்டிய ஒரு குழியில் சுடு மண்ணால் ஆன உலையும், கீழடியில் விலங்கின் எலும்பும் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்பு ஏற்கெனவே கிடைத்த எலும்புத் துண்டுகளை விட பெரிதாக உள்ளது. முழு ஆய்வுக்குப் பிறகே அது எந்த விலங்கின் எலும்பு என்பது தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.