கரோனா வைரஸ் தொற்றால் வீடுகளில் தனிமையில் இருப்போர் வெளியில் வந்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கரோனா வைரஸ் தொற்றால் வீடுகளில் தனிமையில் இருப்போர் வெளியில் வந்தால் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா தொற்றால் வீடுகளில் தனிமையில் இருப்போரும், தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோரும் விதிகளை மீறி வெளியில் வந்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று உறுதியாகி, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை பெற்று தங்கிஇருப்போர், தொற்று ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் வீட்டுதனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டோர் ஆகியோர் விதிகளை மீறிவெளியில் வந்தால், அவர்கள் மாநகராட்சியின் தனிமைப்படுத்துதல் மையங்களில் 14 நாட்களுக்கு அடைக்கப்படுவர். அவர்களை காவல்துறை மூலமாக கண்காணிக்க உள்ளோம். விதிமீறலில் ஈடுபடுவோர் மீது, வேண்டுமென்றே தொற்று பரப்ப முயற்சி என்ற பிரிவில் வழக்கு பதிவுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், வீட்டில் அவருடன்தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமல்லாது அலுவலகத்தில் அவருக்கு அருகில்பணிபுரிந்தவர்களும் தனிமைப் படுத்தப்படுவார்கள்

எம்ஜிஆர் நகர் பகுதியில் அதிகம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் சுமார் 23 தெருக்கள் கொண்ட பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று புளியந்தோப்பு பகுதியிலும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பலன் கிடைத்துள்ளது. தொற்று குறையவும் வாய்ப்புள்ளது. அதனால் காவல்துறை உதவியுடன், இதே போன்று தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் பெரிய அளவில் சீல் வைக்க இருக்கிறோம். குணமடைந்தவர்களை பணியில் சேர்க்காத, குணமடைந்ததற்கான சான்றிதழ் கேட்கும் நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in