Published : 05 Jun 2020 07:05 AM
Last Updated : 05 Jun 2020 07:05 AM

கரோனா வைரஸ் சிகிச்சைக்காக கொடுக்கப்படும் ‘ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி’ மருந்தில் பக்கவிளைவு இல்லை- ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் தகவல்

ஓமியோபதி மருந்தான ‘ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி’ பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் கரோனா வைரஸை குணப்படுத்துகிறது என தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட்டு மருந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இதனுடன் மத்திய, மாநில அரசுகளின் ஆலோசனைகளின்படி ஆயுஷ்மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன. ஓமியோபதி மருத்துவத்தில் இருந்து ‘ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி’ என்ற மருந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களும் இந்த மருந்தை வாங்கி உட்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமைக்கப்பட்டுள்ள மருத்துவ நிபுணர்கள் குழுவை வழிநடத்தும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குநர் டாக்டர் பிரப்தீப் கவுர், “ஓமியோபதி மருந்தான ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி கரோனா சிகிச்சையில் பலன் தரும் என்று எந்த ஆதாரமும் இல்லை. இந்த மருந்து சிறுநீரகங்களை பாதிக்கும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் இந்த மருந்தை உட்கொள்ள வேண்டாம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவக் கவுன்சில் தலைவர் டாக்டர் ஆர்.ஞானசம்பந்தம் கூறியதாவது:

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின்படி கரோனாவைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த மருந்தை கொடுக்கலாம் என்று தமிழக அரசும் அரசாணைவெளியிட்டுள்ளது. ஓமியோபதி மருத்துவம் என்பது பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவமாகும். ஆர்செனிக்கம் ஆல்பம் 30சி மருந்தை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஆரோக்கியமாக இருப்பவர்கள், வேறு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களும் உட்கொள்ளலாம். இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். இந்த மருந்து மூலம் வைரஸ் தொற்று உயிரிழப்பை தடுக்க முடியும். இதுவரை ஒருவர்கூட இந்த மருந்தால் பாதிக்கப்படவில்லை. இந்த மருந்தை உட்கொள்வதால் சிறுநீரகம் உள்ளிட்ட எந்த பாதிப்பும் ஏற்படாது. கரோனா வைரஸுக்கு அலோபதி மருத்துவத்தில் (ஆங்கில மருத்துவம்) மருந்துகள் இல்லை. அதனால், கரோனாவைக் குணப்படுத்தக்கூடிய ஓமியோபதி மருந்து மீதுதவறான குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த வாரம், கபசுரக் குடிநீர் குறித்தும் டாக்டர் பிரப்தீப் கவுர் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குசித்த மருத்துவ ஆராய்ச்சி குழும தலைமை இயக்குநர் க.கனகவல்லி மறுப்பு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x