

திருச்சியைச் சேர்ந்தவர் பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி. இவர் திருச்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரோட்டரி கிளப்புடன் இணைந்து தெர்மல் ஸ்கேனர்களை வழங்கியுள்ளதுடன், களப் பணியில் இருக்கும் போலீஸாருக்கும் அவர்களது இருப்பிடத்துக்கே சென்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வருகிறார்.
இதுகுறித்து டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது: கரோனா பரவல் உள்ள இந்த சூழ்நிலையில், நோயாளிகளுக்கு காய்ச்சல் உள்ளதா என சாதாரண தெர்மா மீட்டர்களை கொண்டு அவர்களை தொட்டு சோதனை நடத்துவது ஆபத்தாக இருக்கும். எனவே, ராக்சிட்டி ரோட்டரி கிளப்புடன் இணைந்து திருச்சியில் உள்ள 14 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தெர்மல் ஸ்கேனர், முகக் கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கரோனா பரவலை தடுக்கும் விதமாக களப்பணியாற்றி வரும் காவல் துறையினரின் இருப்பிடத்துக்கே சென்று பரிசோதனை மேற்கொண்டு, அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளேன்.
மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ‘ஜூம் மீட்’ மூலம் விளக்கம் அளித்து வருகிறேன். தவிர ‘திருச்சி இதயம் பேசுகிறது’ என்ற யூ டியூப் சேனல் மூலம் கரோனாவை எதிர்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வருகிறேன்.
இவ்வாறு டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறினார்.
இதுதவிர பார்வையற்றோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் போன்றவற்றுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.