Published : 04 Jun 2020 21:05 pm

Updated : 04 Jun 2020 21:06 pm

 

Published : 04 Jun 2020 09:05 PM
Last Updated : 04 Jun 2020 09:06 PM

கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, கரோனா இல்லாத சென்னையாகக் காட்டுவதற்கு அரசு முயல்வதாகத் தெரிகிறது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

mk-stalin-slams-tn-government
மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் வீடு வீடாகப் பரிசோதனை செய்து, சென்னையின் ஐந்து மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச் சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா தொற்றால் தலைநகர் சென்னை மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 256 பேர் என்றால், அதில் சென்னையில் மட்டும் 18 ஆயிரத்து 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுவும் ராயபுரம் மண்டலத்தில் 3,224 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2,093 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,029 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 2,014 பேரும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1,798 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை மிக மிக அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய பெரிய மாநிலங்களில் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட, சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்பதை அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை.

கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது மிக மிக அதிகம் என்பதையும் தமிழக அரசாங்கம் உணர்ந்ததா எனத் தெரியவில்லை.

'கரோனாவை மற்ற மாவட்டங்களில் கட்டுப்படுத்திவிட்டோம்' என்றும், 'பலியானவர் எண்ணிக்கை குறைவு' என்றும் கூறும் முதல்வர் பழனிசாமி, சென்னையில் ஐந்து மண்டலங்கள் முழுமையாக கரோனா மண்டலங்களாக மாறிவிட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

அதுவும் சென்னையில் தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் மருத்துவ நிபுணர்கள் சொல்வதைப் போல, லட்சத்தைத் தாண்டிச் செல்லுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் பாதி அளவைத்தான் அரசு சொல்கிறது என்று ஊடகங்கள் இப்போது எழுதத் தொடங்கியுள்ளன. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் மிகக் கூடுதல் என்றும், ஆனால் மிகக் குறைவாகத்தான் கணக்கில் காட்டப்படுகிறது என்றும் தகவல்கள் வருகின்றன.

உரிய சோதனைகள் உடனடியாகச் செய்யப்படுவது இல்லை; சோதனை முடிவுகள் உடனே சொல்லப்படுவதில்லை; மரணங்கள் அனைத்தும் ஐந்து நாட்கள் கழித்துத்தான் அறிவிக்கப்படுகின்றன; கரோனா மரணங்களாக இல்லாமல் வேறு நோய்கள் சொல்லப்படுகின்றன, இப்படி பல்வேறு சந்தேகங்களை மக்கள் எழுப்பி வருகிறார்கள். இவை எதற்கும் முதல்வரோ, அமைச்சரோ, உயர் அதிகாரிகளோ உரிய பதிலைச் சொல்வது இல்லை. தினமும் பாசிட்டிவ் ஆனோர் எண்ணிக்கையை மட்டும் கொடுத்துவிட்டு கடமை முடிந்ததாகச் சென்று விடுகிறார்கள்.

இதனிடையே, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் சங்கக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து நாளை ஒருநாள் அடையாளப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

கரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றும் மகத்தான பணியில் இருக்கும் மருத்துவத் துறையினரையும் போராடும் நிலைமையிலேயே அரசு வைத்திருப்பது வேதனை தருவதாகும். கூட்டமைப்பினரை அழைத்து உடனடியாக அரசு பேச வேண்டும். அவர்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்க வேண்டும்.

கடந்த நான்கு நாட்களாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தினமும் ஆயிரத்தைத் தாண்டி வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. ஊரடங்கு அமலில் இருப்பதாகவும் 144 போட்டுள்ளதாகவும் சொல்லப்படும் சென்னையில் வாகனப் போக்குவரத்து என்பது, நெரிசல் மிகுந்ததாக உள்ளது என்றால் இதுதான் ஊரடங்கும், 144 தடையும் அமலில் இருக்கும் லட்சணமா?

கோயம்பேடு காய்கறி அங்காடியைத் திறந்துவிட்டும், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டும் கரோனா பரவலுக்கு மறைமுகக் காரணமாக இருந்த தமிழக அரசு, இப்போது சென்னையைத் திறந்து விட்டு, அடுத்த கரோனா பாய்ச்சலுக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களையும் கடுமையான அரண் அமைத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், கட்டுப்பாடுகள் அனைத்தையும் தளர்த்தி, 'கரோனா இல்லாத சென்னை'யாகக் காட்டுவதற்கு அரசு முயல்வதாகத் தெரிகிறது.

நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகளை வீடு வீடாகச் செய்ய வேண்டும். இப்பகுதியைச் சென்னையின் மற்ற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். கட்டுப்பாட்டுப் பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களை அரசே வழங்க வேண்டும். அப்பகுதிக்குள் வெளியார் யாரும் நுழைய முடியாதபடி கண்காணிக்க வேண்டும். சென்னையின் ஐந்து மண்டலங்களைக் காப்பதில் அரசு முழுச்சிந்தனையையும் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தமிழக அரசுமு.க.ஸ்டாலின்முதல்வர் எடப்பாடி பழனிசாமிCorona virusTamilnadu governmentMK stalinCM edappadi palanisamyCORONA TNPOLITICS

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author