

கரோனா பேரிடர் முடியும் வரை தனியார் மருத்துவமனைகளைத் தமிழக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் விதிக்கும் கட்டணம் என்னவென்பதை தமிழக அரசிடம் அவை சமர்ப்பித்துள்ளன. சாதாரண கரோனா நோயாளிக்கு (10 நாட்களுக்கு) 2,31,820 ரூபாய். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிக்கு (17 நாட்களுக்கு) 4,31,411 ரூபாய்.
இந்தக் கட்டணமில்லாமல் நாளொன்றுக்கு 9,600 ரூபாய் தனியே கொடுக்க வேண்டுமாம். மருத்துவர்களுக்கான கன்சல்டிங் ஃபீஸ் தனியாகத் தர வேண்டுமாம். அதாவது, நாளொன்றுக்கு சுமார் 40 ஆயிரம் கட்டணம். இரண்டு மாத முழு அடைப்பில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் இந்த கட்டணத்தைச் செலுத்திச் சிகிச்சை பெற முடியாது.
கரோனா சமூகப் பரவல் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமென்றால் தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் இதில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வளவு பணம் செலவழித்து யாராலும் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, கரோனா பேரிடர் முடியும்வரை தனியார் மருத்துவமனைகளைத் தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்து அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி மருத்துவம் அளிக்க வேண்டும்''.
இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. கூறியுள்ளார்.