விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கீழக்கரை டிஎஸ்பி-யிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் கீழக்கரை டிஎஸ்பி-யிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு
Updated on
1 min read

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் அவரது தோழியும் கீழக்கரை பெண் டிஎஸ்பியுமான மகேஸ்வரியிடம் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பாக கடலூரில் உள்ள விஷ்ணுபிரியாவின் பெற்றோரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், தொடர் நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் மாளவியாவிடம் சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் 8 மணி நேரத் துக்கு மேல் விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது, வழக்கறிஞர் மாளவியாவிடம் 200 கேள்விகள் வரை கேட்டு, பதில் பெற்றுள்ளனர். இதில், விஷ்ணுபிரியாவுடன் ஏற்பட்ட பழக்கம் முதல் அவர்களுக்குள் நடந்த உரையாடல் சம்பந்தமான கேள்விகள் அதிகம் இடம் பெற்றிருந்ததாக தெரிகிறது.

வழக்கறிஞர் மாளவியாவின் செல்போனை விசாரணையின் போது, சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டனர். அதற்கு முதலில் தர மறுத்த மாளவியா பின்னர் விசாரணை நடைபெற்ற நேரம் மட்டும் செல்போனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

மேலும், மாளவியாவின் செல்போனில் உள்ள குறுந்தகவல், வாட்ஸ்-அப் தகவல், படம், வீடியோ ஆகியவை குறித்து ஆய்வு செய்ய மாளவியாவிடம் செல்போனை சிபிசிஐடி போலீஸார் கேட்டபோது, உரிய சம்மன் அனுப்பினால் பெற்றுக் கொள்ளலாம் என மாளவியா தெரிவித்ததை தொடர்ந்து விசாரணை முடிவில் செல்போனை அவரிடம் சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்தனர்.

மாளவியாவிடம் உள்ள இரண்டு செல்போன்களை சம்மன் அனுப்பி பெற சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முதல்கட்டமாக மாளவியாவிடம் நடந்து வரும் விசாரணையின் அடிப்படையில், அடுத்தக்கட்டமாக விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழியும், கீழக்கரை டிஎஸ்பியு மான மகேஸ்வரி உள்ளிட்ட சிலரிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in