

சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு 10-ம் வகுப்புத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதுவரை கரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக இருந்த கொடைக்கானல், மாணவி வருகையால் தொற்றுக்குள்ளானது.
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்புப் படித்து வருகிறார். கரோனா தொற்று பரவத் தொடங்கியவுடன் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் இவர், தனது சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பினார்.
10-ம் வகுப்புத் தேர்வு தொடங்கவுள்ள நிலையில் இவர் முன்னதாகவே கொடைக்கானல் திரும்பினார். காரில் வந்த இவருக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூரில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இவர் கொடைக்கானல் சென்றார்.
பரிசோதனை முடிவுகள் இன்று (ஜூன் 4) காலை வெளியானது. இதில் மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவியை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து கரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மாவட்ட எல்லையில் நடந்த பரிசோதனைக்குப் பின் கொடைக்கானல் சென்ற இவர் அங்குள்ள ஆனந்தகிரி பகுதியில் ஓர் இரவு தங்கியுள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இவருடன் பயணித்த கார் ஓட்டுநர், பெற்றோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா தொற்று பாதிப்பு இல்லாத பகுதியாக இருந்து வந்த கொடைக்கானல் நகர் பகுதியில் மாணவி தங்கியதால் தொற்றுப் பகுதியாகியுள்ளது. இதனால் கொடைக்கானல் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
காவலருக்கு கரோனா
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த தமிழக பட்டாலியன் போலீஸ் ஒருவர், டெல்லி திகார் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் கடந்த 1-ம் தேதி சின்னாளபட்டி திரும்பினார். இவருக்கு மதுரை விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று (ஜூன் 3) இரவு இவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறி சின்னாளபட்டியில் தங்கியிருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.