மும்பை வாழ் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழகத்துக்கு அழைத்து வர சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்; முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கடிதம்

கே.எஸ்.அழகிரி - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி - முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
2 min read

மும்பை வாழ் புலம்பெயர்ந்த தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர சிறப்பு ரயில்களை இயக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (ஜூன் 4) முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:

"மகாராஷ்டிர மாநிலத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் மும்பை மாநகரில் வாழ்கிற தமிழர்கள் தாய்த் தமிழகத்திற்கு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கோரிக்கையை மகாராஷ்டிரா, தமிழக அரசிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது.

மும்பையில் வாழ்கிற தமிழர்களை சிறப்பு ரயில்கள் மூலமாக தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருப்பதை தாங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். ஆனால், இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதனால் மும்பை வாழ் தமிழர்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இருந்து ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதையும், குறிப்பாக மும்பையிலிருந்து தமிழ்நாட்டுக்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதையும் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களையோ அல்லது வழக்கமான ரயில்களையோ, மகாராஷ்டிராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இயக்கவில்லை.

மும்பையில் தாராவி மற்றும் சயான் கோலிவாடா பகுதியில் குடும்பத்தோடு வசிப்பவர்களில் 75 சதவிகிதம் பேர் தமிழர்கள். இவர்களுக்கு மும்பை முகவரியில் ஆதார் அட்டைகளும் உள்ளன. புலம்பெயர்ந்த தமிழக தொழிலாளர்களுக்காக மகாராஷ்டிராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 5 ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறைந்தது 3 சிறப்பு ரயில்களையாவது இயக்கத் தயாராக மாநில அரசு இருந்தது.

ஆனால், இதில் பயணம் செய்வோரிடம் தமிழக முகவரியில் ஆதார் அட்டை இல்லை என்றும், அவர்கள் தமிழர்கள் தானா என்றும் தெரியவில்லை என தமிழ்நாடு அரசும், தெற்கு ரயில்வே நிர்வாகமும் நிராகரித்துவிட்டன. இந்த அணுகுமுறை மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள முகவரியில் ஆதார் அட்டை பெற்றுள்ள மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சிறப்பு ரயில்கள் மூலம் திரும்பி விட்டனர். எந்த மாநில அரசும் இதுபோன்று நிராகரிக்கவில்லை. சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தானா என்ற கேள்வியையும் மற்ற மாநில அரசுகள் எழுப்பவில்லை. ஆனால், தமிழக அரசு இத்தகைய நிபந்தனை விதிப்பது மிகுந்த வியப்பை தருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள முகவரியில் ஆதார் அட்டை பெற்ற இந்த தமிழர்கள் தினக் கூலிகளாகவும், தோல் தொழிற்சாலை, ஏற்றுமதி ஆடை நிறுவனங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளாகவும் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு தமிழ்நாடு அரசு அணுக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக அரசும், தெற்கு ரயில்வேயும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயிலையும், வழக்கமான ரயிலையும் தமிழ்நாட்டுக்கு உடனே இயக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஆதார் அட்டையைக் கேட்டு நிர்பந்திக்கக் கூடாது.

எனவே, மும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழகத்திற்கு அழைத்து வர தென்னக ரயில்வேயுடன் இணைந்து சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in