

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கமானது முழு தோல்வி அடைந்துவிட்டது என மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று (ஜூன் 4) அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்திய அரசு அறித்த பொதுமுடக்கம் முழு தோல்வி அடைந்துவிட்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது சமூகத் தொற்றாக மாறியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு சொல்லும் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தற்போதைய இக்கட்டான சூழலில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை. இது மாணவர்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும்.
21-ம் நூற்றாண்டிலும் மருளாளியின் பேச்சைக் கேட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தனது மகளையே தந்தை கொலை செய்யும் அளவுக்கு மூடநம்பிக்கை புரையோடி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்களையும் ஈடுபடத் தூண்டியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை கரு.நாகராஜன் விமர்சித்த விவகாரத்தில் நான் உட்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளோம். அதேசமயம், என்னைப் பொறுத்தவரையில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்பது தேவையற்றது.
கேரளாவில் யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிகுண்டு வைத்து கொடுத்ததாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சம்பந்தப்பட்டோர் மீது விலங்குகள் நல வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்".
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.