Published : 04 Jun 2020 04:31 PM
Last Updated : 04 Jun 2020 04:31 PM

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு அநீதி; ஒன்று திரண்டு நீதி கேட்கும் தமிழ்நாடு; கி.வீரமணி வரவேற்பு

கி.வீரமணி: கோப்புப்படம்

சென்னை

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தமிழ்நாடு ஒன்று திரண்டு நீதிமன்றத்தில் நீதி கேட்பது வரவேற்கத்தக்கதாகும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடுதான் இந்திய நாட்டுக்கே சமூக நீதியின் தேவையைப் பரப்பி, அதனை ஆட்சிகளின் மூலம் செயற்படுத்தி கல்வியிலும், அரசு அலுவல்களிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட கோடானு கோடி உழைக்கும் மக்களாகிய தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று காலங்காலமாய் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மனுதர்மம் கோலோச்சியதால் தற்குறிகளாக, வெறும் உடல் உழைப்புக்கு மட்டுமே உரியவர்களாக நாட்டின் மிகப் பெரும்பாலோராக இருந்த நிலையை மாற்றியதுதான், இன்று ஓரளவு உரிமைகளை கல்வி, உத்தியோகத் துறைகளில் பதவிகளை, அலுவல்களை அவர்கள் அனுபவித்து வருவதற்கு முக்கியக் காரணம் திராவிட இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை.

இதற்கு முக்கிய அடிப்படை. அதன் முன்னோடி திராவிட இயக்கத் தலைவர்களின் நூறாண்டுக்கு முந்தைய பணியும், பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி, அவரைத் தொடர்ந்து வந்த திராவிட அடையாளத்தால், ஆட்சி வாய்ப்பைப் பெற்ற எம்ஜிஆர், ஜெயலலிதா உள்பட பலரது ஆட்சிகளின் பங்களிப்பும் உள்ளது.

ஆட்சிக்குப் போகாமலேயே ஆட்சி செய்தவர், செய்பவர் அன்றும் இன்றும் பெரியாரே ஆவார்! சூரிய வெளிச்சத்தினால், மாமழையினால் பயிர்களும், செடி, கொடிகளும் செழித்தோங்கி வளர்வதைப்போல், பெரியார் என்ற அந்த ஒப்பற்ற தலைவர் உழைத்த பேருழைப்பினால், இந்த சமூக நீதி மண்ணில், சமூக நீதிக் கொடி தலை தாழாது, பறந்துகொண்டே இருக்கிறது, என்றும் இருக்கும்.

சமூக நீதி அடிப்படையில் ஆட்சிக்கு ஆதரவு

பெரியார், காங்கிரஸில் சேருவதற்கு முன்பே சமூக நீதியை வலியுறுத்தியவர். அதற்காகவே அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததும், அதற்காகவே அதிலிருந்து வெளியேறியதும், அதற்காகவே பிறகு நீதிக்கட்சி முதல் காமராஜர் ஆட்சி, திமுக ஆட்சி உள்பட அத்தனை ஆட்சிகளையும் ஆதரித்தார் என்பதும் வரலாறு.

தமிழ்நாட்டில் சமூக நீதிப் போராட்டம் வெற்றி பெற்று, இன்று அசைக்க முடியாமல், இந்தியாவுக்கே வழிகாட்டுவதும், அவருடைய உழைப்பாலும், லட்சியப் பயணத்தாலும்தான்.

சமூக நீதிப் பறிப்பை எதிர்க்கும் நிலைப்பாட்டில் ஓர் குரல், ஓர் அணி!

பிரச்சாரம், போராட்டம் என்ற இரு வழிமுறைகள் மூலம், பாதிக்கப்பட்ட மக்களே மறந்திருந்த உரிமைகளைப் பெற அவர்களுக்கு விழிப்புணர்வூட்டி, வீதிகளில் திரளவைத்து, மாலை நேரக் கல்லூரியாக பொதுக்கூட்டங்களைப் பயன்படுத்தி, உரிமைப் போருக்குக் குரல் கொடுத்து தொய்வில்லாமல் தொடர் பணியை பெரியார் மேற்கொண்டதுதான் தமிழ்நாட்டின் அரசியலில் பல திசைகளில் இருப்பவர்களுக்கும் சூரிய வெளிச்சமாக, ஒரு அறிவியல் தேவையாக அன்றும் இன்றும் என்றும் அமைந்துள்ளது.

சமூக நீதிக்கு ஆபத்து மத்திய அரசாலோ அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் மூலமோ ஏற்படும்போதெல்லாம் எல்லோரும் தனித்தனி கட்சிகள்தான் என்றாலும், இந்த சமூக நீதிப் பறிப்பை எதிர்க்கும் நிலைப்பாட்டில் ஓர் குரல், ஓர் அணி என்றே திரளும் உறுதிப்பாடு தமிழ்நாட்டையே இப்பிரச்சினையில் இந்திய நாட்டுக்கு உயர்த்திக் காட்டுகிறது.

அண்மையில் மத்திய தொகுப்பில் மருத்துவப் படிப்பு இடங்களில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பில், கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு அமலான காலத்திலிருந்து அண்மை வரை, பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு வெறும் பூஜ்ஜியமாக இருப்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி?

இதனை நாம் சுட்டிக்காட்டிய நிலையில், திமுகவின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் நீதி கேட்டு உடனடியாக வழக்கும் தொடர்ந்தார். அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் கூட்டி விவாதித்து இதனை வலியுறுத்தி கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றியது அக்கூட்டம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் கழகம் வழக்கு!

அதையொட்டி, மேல் நடவடிக்கைகளாக மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாமக ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. திராவிடர் கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் இப்போது வழக்குத் தொடுத்து, இப்பிரச்சினையில் சமூக நீதி கேட்க முன்வந்திருப்பதும் வரவேற்கத்தக்கதேயாகும்!

கட்சிகளால் பிரிந்திருந்தாலும், சமூக நீதிக்குப் போராடுவதில் தமிழ்நாடு ஓர் முகம், ஓர் குரல், ஓர் அணி என்று இருப்பது இந்த மண் எப்போதும் பெரியார் மண்தான், சமூக நீதி மண்தான் என்பதை உலகுக்குப் பிரகடனப்படுத்துகிறது.

வடபுலத்திலும் ஆதரவு...

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் முறையிட்டு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் கோரிக்கையின் பலனாக மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் அந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சட்டப்படி விளக்கம் கேட்டுள்ளது என்பதும், வழக்குகள் பல நீதிமன்றங்களில் வந்துள்ளனவென்பதும், வடபுலத்தில் உள்ள லாலு பிரசாத் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தரப் பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ் தலைமை தாங்கும் சமாஜ்வாதி கட்சியும் கூட குரல் கொடுக்க முன்வந்துள்ளதும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை இப்படி இன்னமும் போராடி சட்டப் போராட்டம் உள்பட நடத்தித்தான் பெற வேண்டிய நிலை இருப்பது எவ்வகையில் நியாயம்?

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியது அவசியம்

கரோனா கொடும் தொற்று ஒரு தொடரும் தொல்லை, அபாயம் என்பதாலும், ஏராளமான மருத்துவர்களும், மருத்துவத் துறை ஊழியர்கள் பலரது எண்ணிக்கையும் நம் நாட்டில் மேலும் பல மடங்கு பெருகி ஆக வேண்டியது காலத்தின் மிக முக்கிய தேவை. எனவே, நீட் தேர்வு என்ற ஒரு தேர்வை ரத்து செய்து, பழையபடி, அந்தந்த மாநில நுழைவுத் தேர்வு முறைகளையே மீண்டும் அனுமதித்தால், நீண்ட கால கண்ணோட்டத்தில் இது வெகுவான பலன் அளிப்பது உறுதி!

வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைப்பது என்பதைவிட, பிரதமர் மோடி கூறும் தற்சார்புக்கு நீட் தேர்வு ரத்து பெரிதும் இன்றியமையாத ஒன்றாகும். மருத்துவர்களின் விகிதம், மக்கள்தொகை விகிதத்திற்கு வெகு குறைவே. இதைப் போக்கிட, அதுதான் ஒரே வழி!

மக்கள் நல்வாழ்வுக் கண்ணோட்டத்தில் இது இன்றியமையாததாகும்".

இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x