Last Updated : 04 Jun, 2020 03:46 PM

 

Published : 04 Jun 2020 03:46 PM
Last Updated : 04 Jun 2020 03:46 PM

ஊருக்கே ருசியாக சமைத்த சமையல் கலைஞர்கள் உணவின்றி கஞ்சி காய்ச்சி சாப்பிடும் அவலம்

கஞ்சி காய்ச்சி சாப்பிடும் சமையல் கலைஞர்கள்.

புதுச்சேரி

திருமண விழா, ஊர்த் திருவிழா என ஊருக்கே ருசியாக சமைத்து அனைவரும் சாப்பிடுவதை ரசித்த சமையல் கலைஞர்கள் தற்போது கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு வாழும் சூழலுக்கு கரோனா காலம் தள்ளியுள்ளது.

பல்வேறு கலைகளில் சிறந்தோர் புதுச்சேரியில் ஏராளமானோர் உண்டு. ஆய கலைகளில் ஒன்றான சமையல் கலையில் வல்லுநர்களும் புதுச்சேரியில் பரவி உள்ளனர். குறிப்பாக, புராணசிங்குபாளையம், வாதானூர், சோம்பட்டு, திருக்கனூர், கூனிச்சம்பட்டு என பல பகுதிகளில் 2,700-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வசிக்கின்றனர். புதுச்சேரி மட்டுமல்லாமல், தமிழகம், ஆந்திரம் என பல மாநிலங்களுக்கும் சென்று சமைத்தோரின் நிலை தற்போது கரோனாவால் சிதைந்துள்ளது.

சமையல் கலைஞர்கள் அதிக அளவில் வசிக்கும் புராணசிங்குபாளையம் சென்றால் சமையல் கலைஞர்கள் கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு வரும் சூழலே நிலவுகிறது.

புராணசிங்குபாளையம் சமையல் கலைஞர்கள் தலைவர் குணசேகரன் கூறுகையில், "கரோனா காலத்தில் ஊரடங்கால் விழாக்கள் நடக்கவில்லை. திருமண மண்டபமும் மூடப்பட்டதால் வேலையே இல்லை. எங்களுக்கு நன்கு தெரிந்தது சமையல் கலைதான்.

வீடுகளில் சமையல் பாத்திரத்தை அப்படியே வைத்தால் வீணாகிவிடும் என்பதால் தண்ணீர் பிடித்து சுடவைத்துக் கழுவி வைக்கிறோம். அரசு தந்த இலவச அரிசியை வைத்து கஞ்சி காய்ச்சி சாப்பிடுகிறோம். சில சமயம் தயிர் சாதம், ரசம் சாதம் சமைத்துச் சாப்பிடுவோம். நாங்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களின் கீழ் வராததால் உதவித்தொகையும் அரசிடமிருந்து கிடைக்கவில்லை,

முன்பெல்லாம் திருப்பதி, சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, வரை சமையல் பணிக்குச் சென்ற நாங்கள் ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். எங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வில் 20 பேர் வரை வரலாம் என்றால் எத்தனை பேர் சமையல் வேலைக்குச் செல்வது என்ற கேள்வி வருகிறது. நாங்கள் சமைக்க 40 பேர் வரை செல்வோம். தற்போது குறைவானோரை அழைத்துச் சென்றால் மற்ற குடும்பங்கள் பட்டினியால் வாடும் தர்ம சங்கடம் எழும்.

விழா நிகழாததால் முன்பணத்தை வாங்கிச் சென்றோரும் உண்டு. அப்பணத்தை கஷ்ட காலத்தில் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றோரும் உண்டு. கரோனா எல்லாருக்கும்தானே" என்றார் சோகத்துடன்.

சமையல் கலைஞர்களிடம் பேசியபோது, "ஊருக்கே சமைத்து வழங்கினோம். சில சமயம் குறைந்த பொருட்கள்தான் இருக்கும், அதிகமானோர் வந்து விடுவார்கள். அதே ருசி குறையாமல் அனைவரும் திருப்தியாக சாப்பாடு சமைத்த காலமெல்லாம் நினைவில் நிற்கிறது. ஆனால், இப்போது நாங்களே சாப்பாட்டுக்கு கஷ்டப்படுகிறோம்" என்றனர், பரிதாபத்துடன்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x