

ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலையை குறைந்தபட்சம் ரூ.4,000 என்று நிர்ணயம் செய்து அறிவிக்க முன்வர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. தற்போது மத்திய அரசு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அறிவித்துள்ளது. இந்த விலை நிர்ணயம் தமிழக விவசாயிகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு போதுமானதல்ல.
எனவே, ஒரு குவிண்டால் நெல்லுக்கு விவசாயிகள் என்ன விலை எதிர்பார்க்கிறார்களோ அதை பூர்த்தி செய்தால் தான் விவசாயத் தொழில் மேம்படும், நெல் விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் பயனடைவார்கள்.
அதாவது, மத்திய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக பொது ரகத்துக்கு ரூ.1,868 ஆகவும், சன்ன ரகத்துக்கு ரூ.1,888 ஆகவும் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.53 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை தமிழக விவசாயிகள் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போதுமானதல்ல என கருதுகிறார்கள்.
ஏற்கெனவே வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் சேர்த்து 50 சதவீதம் கூடுதலாக கணக்கிட்டு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார். இதைத் தான் விவசாயிகளும் எதிர்பார்க்கிறார்கள்.
குறிப்பாக, ஒரு குவிண்டால் நெல் உற்பத்திக்கு ஆகும் செலவு ரூ.3,000. எனவே இதன் விலையில் கூடுதலாக 50 சதவீதம் சேர்த்து கொடுத்தால் தான் விவசாயிகள் லாபம் அடைவார்கள். எனவே, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ஆதார விலையாக குறைந்தபட்சம் ரூ.4,000 நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது தான் விவசாயிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மத்திய அரசு, இப்போதைய கரோனா காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவது பலன் தருகிறது. இந்நிலையில், மத்திய அரசு விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்தி ரூ.4,000 என்று அறிவிக்க முன்வர வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.